தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

5ஜி நெட்வொர்க் அதன் வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது: தொலைத்தொடர்பு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ்

Posted On: 08 FEB 2022 2:29PM by PIB Chennai

இந்திய தொலைதொடர்பு துறையினர் தகுதிவாய்ந்த வெளிநாட்டு கொள்முதலாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக, 'இந்தியா டெலிகாம் 2022' எனும் பிரத்யேக சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.

தகவல் தொடர்பு இணை அமைச்சர் திரு தேவுசின்ஹ் சவுகான், தகவல் தொடர்பு துறை செயலாளர் மற்றும் டிசிசி தலைவர் திரு கே ராஜாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்திய அரசின் வர்த்தகத் துறையின் சந்தை அணுகல் முன்முயற்சி திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்புத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் 2022 பிப்ரவரி 8 முதல் 10 வரை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

 

45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தகுதிவாய்ந்த கொள்முதலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 40-க்கும் அதிகமான இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் திறன்களை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றன.

“பெரியதொரு மின்னணு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இன்று, இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது. 20%-க்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இது வளர்ந்து வருகிறது. ஒரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்தை இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பல்வேறு பொருட்கள், தொழில்முனைவோர் மற்றும் 85,000 பொறியாளர்களை உருவாக்குவதற்கான மிக விரிவான திட்டமாக இது உள்ளது, என்று அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தமது தொடக்க உரையில் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அமைச்சர் கூறுகையில், “4ஜி கோர் மற்றும் ரேடியோ நெட்வொர்க் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி நெட்வொர்க் அதன் இறுதி கட்ட வளர்ச்சியில் உள்ளது. நாடு இன்று 6ஜி தரநிலைகளின் வளர்ச்சியில், 6ஜி சிந்தனை செயல்பாட்டில் பங்கேற்று வருகிறது, என்றார்.

சிறப்புரை ஆற்றிய இணை அமைச்சர் திரு தேவுசின்ஹ் சவுகான், “தொடர்பு என்பது வெறும் வசதியல்ல. நாட்டின் குடிமக்களுக்கு தகவல், கல்வி மற்றும் கேள்வி கேட்கும் வாய்ப்பைப் பெற உதவுவதன் மூலம் அவர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது மற்றும் அரசாங்கத்தை பொறுப்பு மிக்கதாக்குகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும்  பொறுப்பேற்றல் ஆகியவை நமது ஜனநாயகத்தை துடிப்பாகவும் வலிமையாகவும் ஆக்குகின்றன. இது சமூக-பொருளாதார மாற்றங்களுக்கான முதன்மையான இயக்கமாகும். அதனால்தான், 6 லட்சம் கிராமங்களுக்கும் ஆப்டிகல் ஃபைபர் கொண்டு செல்லும் ஒரு லட்சியத் திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. 2.6 இலட்சம் கிராமங்களை நாங்கள் அடைந்துள்ளோம், 2025-ம் ஆண்டிற்குள் இலக்கை அடைய தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது, என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796470

***************(Release ID: 1796542) Visitor Counter : 231