ஜல்சக்தி அமைச்சகம்
வெற்றிக் கதை : கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம்
Posted On:
07 FEB 2022 1:22PM by PIB Chennai
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில், புதுமையான, குறைந்த செலவிலான, கூட்டுத் திட்டம் ஒன்றை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் மூலம், பிளாள்டிக் கழிவுகளை ஒழிப்பதிலும், தூய்மையாகக் காட்சி அளிப்பதிலும், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்திற்குட்பட்ட போர் வட்டாரத்தில் உள்ள சாசேவாடி கிராமப் பஞ்சாயத்து, நாட்டிற்கே முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் கிராமப்புறங்களிலும், பெரும் சவாலாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்குத் தீர்வுகாண, தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் இரண்டாம் கட்டத்தில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
முன்னோடித் திட்டமாக, ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் இயங்கிவருவதுடன், அதிக அளவிலான மக்கள் வந்து செல்லக்கூடிய சாசேவாடி, ஷின்டேவாடி, வேலு மற்றும் காசுர்டி ஆகிய நான்கு கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதும், எரிக்கப்படுவதும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், இதற்கு அவசரத் தீர்வுகாணவேண்டிய அவசியம் ஏற்பட்டது. திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத பகுதிகளை உருவாக்குவதிலும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முக்கியமாகக் கருதப்பட்டது.
மேலும், தூய்மை இந்தியா இயக்கம்-கிராமப்புறம் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, சம்பந்தப்பட்ட வட்டாரம்(ஒன்றியம்)/ மாவட்டத்தின் கடமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி, போர் வட்டார வளர்ச்சி அலுவலர்(பிடிஓ) திரு.வி.ஜி.தன்புரே, மும்பை – பெங்களூரு நெடுஞ்சாலையில், புனே அருகே, அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேரக்கூடிய கிராமங்களில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு, தொகுப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார்.
இதன் முதற்கட்டமாக, இப்பகுதியிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும்,பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதில் அதன் தொடர்பு குறித்து, சமுதாயக் கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி மூலம், தொழிற்சாலைகளில் பயன்படக்கூடிய ஒருவகை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய தனியார் நிறுவனத்துடன் இணைந்து, புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, ஏற்கனவே உள்ள வளங்களை இயன்றஅளவு பயன்படுத்தி, சாசேவாடி கிராமத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள், மொத்தமாக சேகரிக்கப்பட்டு, பின்னர் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில், குப்பைகளைப் பிரித்து வழங்க, பொதுமக்கள் போதிய அளவு ஒத்துழைக்கவில்லை என்றாலும், தொடர் முயற்சிகளின் விளைவாக, அனைத்து வீடுகளிலும் இதனைப் பின்பற்றினர். பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தும் தனியார் நிறுவனம், ஒரு கிலோ-வுக்கு ரூ.8 விலை கொடுத்து வாங்கியது. இதன் மூலம் கிடைத்த வருவாய், அந்த கிராமப் பஞ்சாயத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த கழிவுகளை வாங்கிச் செல்லும் தனியார் தொழிற்சாலை, கழிவுகளை சிறு துகள்களாக்கி, அதிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கரித்துண்டுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற உபபொருட்களைத் தயாரிக்கிறது. எண்ணெய் உற்பத்தியின்போது கிடைக்கும் எரிவாயு, அந்த தொழிற்சாலையின் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுவாயுக்களின் அளவும், மகாராஷ்டிர அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள அளவிற்கும் குறைவாகவே உள்ளது.
சாசேவாடி கிராமப் பஞ்சாயத்தில், இத்திட்டம் வெற்றி அடைந்திருப்பதையடுத்து, மற்ற மூன்று கிராமப் பஞ்சாயத்துகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதுடன், இந்த வட்டாரத்திலுள்ள(ஒன்றியத்திலுள்ள) அனைத்துக் கிராமங்களிலும், படிப்படியாக இத்தகைய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையைப் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
*******
(Release ID: 1796100)
(Release ID: 1796186)
Visitor Counter : 231