பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முதன்மை திட்டங்கள்

Posted On: 02 FEB 2022 9:34AM by PIB Chennai

இந்தியாவின் மக்கள்தொகையில் 67.7% ஆக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரமளித்தல், பாதுகாப்பு மற்றும் அவர்களது ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்வது நாட்டின் நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கும், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை அடைவதற்கும் முக்கியமானது ஆகும்.

நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் மகிழ்ச்சியான குழந்தைகள் மற்றும் தன்னம்பிக்கை, தற்சார்பு கொண்ட பெண்களை உறுதி செய்வதற்காக  எளிதில் அணுகக்கூடிய, நம்பகமான மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளிலிருந்து விடுபட்ட சூழலை அவர்களுக்கு வழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முயற்சிக்கிறது.

பாலின சமத்துவம் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட சட்டம், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க அமைச்சகங்களுக்கு இடையேயான மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதும் அமைச்சகத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேற்கூறிய நோக்கங்களை அடைவதற்காக, ஊட்டச்சத்து திட்டம் 2.0, சக்தி திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய அமைச்சகத்தின் 3 முதன்மை திட்டங்களுக்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

ஊட்டச்சத்து திட்டம் 2.0 என்பது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டமாகும். குழந்தைகள், பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்ள இது முற்படுகிறது. உணவின் தரம் மற்றும் விநியோகத்தை மேம்படுத்தவும் இது முயற்சிக்கும்.

பெண்கள்  வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முன்னேறும் போது, ஒருங்கிணைந்த பராமரிப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதை சக்தி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘சம்பல்மற்றும்சமர்த்தியாஆகிய இரண்டு துணைத் திட்டங்கள் இதில் உள்ளன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது வாத்சல்யா திட்டத்தின் நோக்கமாகும். 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக் கமிஷன் காலத்தில் 3 திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து திட்டம் 2.0-ன் மொத்த மதிப்பீடு ரூ.1,81,703 கோடி ஆகும். இதில் மத்திய பங்கு ரூ1,02,031 கோடி, மாநிலங்கள்  பங்கு ரூ.79,672 கோடி ஆகும்.

சக்தி திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.20989 கோடி ஆகும். இதில் மத்திய பங்கு ரூ.15761 கோடியும், மாநிலங்கள் பங்கு ரூ.5228 கோடியும் ஆகும்.

வாத்சல்யா திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.10916 கோடி ஆகும். இதில் மத்திய பங்கு ரூ.6928 கோடியும், மாநிலங்கள் பங்கு ரூ.79,672 கோடியும் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794595  

-----



(Release ID: 1794723) Visitor Counter : 3946