சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவிட்-19 தயார்நிலை மற்றும் தேசிய கோவிட் 19 தடுப்பூசித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தமிழகம் உட்பட 8 தென்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு கூட்டம்

Posted On: 28 JAN 2022 6:27PM by PIB Chennai

‘‘பரஸ்பர புரிதல், சிறந்த நடைமுறைகள் பகிர்வு மற்றும் மத்திய மாநில அரசுகள் இடையே கூட்டுறவுச்  செயல்பாடு ஆகியவை கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவியது’’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

கோவிட்-19 தயார்நிலை மற்றும் தேசிய கோவிட் 19 தடுப்பூசித்  திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றின்  மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமை செயலாளர்கள், நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார்.

 

 அப்போது மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், புதுவை முதல்வர் திரு என். ரங்கசாமி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தேவையான கொவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாநில அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். 

 

தடுப்பூசி போடத்  தகுதியானவர்களில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 74 சதவீதம் பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டதையும் சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் இது உலகளாவிய வெற்றி எனக்  குறிப்பிட்டார்.  இது தவிர முன்னெச்சரிக்கை தடுப்பூசி மற்றும் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத்  தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாதம் தொடங்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்துக்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும்படியும், அவர் மாநிலங்களை கேட்டுக்கொண்டார்.

கோவிட் மேலாண்மையில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளைப்  பின்பற்றுதல் போன்ற 5 முக்கியமான விஷயங்களைத்  தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

 

 கோவிட் மேலாண்மையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.  கொவிட் தொற்றுப்  பரவல் குறித்த தகவல்களை சரியான நேரத்தில் தெரிவிக்கும்படியும் அவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.

 இரண்டாம் கட்ட கோவிட் அவசர காலத்  திட்ட நிதிகளை மாநிலங்கள் முழுமையாகப்  பயன்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கேட்டுக் கொண்டார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபைத்  தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்க்கவா உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793320

                                                                                                ********


(Release ID: 1793375) Visitor Counter : 169