குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தேர்தல்களை கூடுதல் பங்கேற்புடையதாக மாற்றுவதற்கு 75% வாக்காளர்கள் வாக்களிக்க குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்


ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து பொதுக் கருத்து உருவாக திரு.வெங்கையா நாயுடு கோரினார்

Posted On: 25 JAN 2022 1:21PM by PIB Chennai

தேர்தல் ஜனநாயகத்தை கூடுதல் பங்கேற்புள்ளதாக மாற்றுவதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தையும், குடிமக்களையும் இன்று வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, வளர்ச்சியின் உணர்வை நீடிக்க செய்வதற்கு ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து பொதுக் கருத்து உருவாக வேண்டுமென்றும் கோரினார்.

12-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று செய்தி வெளியிட்டுள்ள திரு.நாயுடு, எந்தவொரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்று வலியுறுத்தியதோடு, தேர்தலில் தகுதி அடிப்படையில் போட்டியாளர்களை தீர்மானிக்குமாறு குடிமக்களை கேட்டுக் கொண்டார். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டபின் ஐதராபாத் இல்லத்தில் திரு.நாயுடு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் அவரது உரை வாசிக்கப்பட்டது.

1951-52 காலத்தில் மக்களவைக்கு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் 44.87 சதவீதமாக இருந்த வாக்காளர் வருகை 2019-ல் 17-வது மக்களவைக்கான வாக்காளர் வருகை 67.40 சதவீதமாக இருந்தது என்றும், இது 50 சதவீதம் அதிகம் என்றும் கூறிய அவர், இதற்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

“நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் எந்தவொரு வாக்காளரும் விடுபடக் கூடாது என நாம் உறுதியேற்று அடுத்த பொதுத் தேர்தலிலாவது குறைந்தபட்சம் 75 சதவீத வாக்காளர் வரவு அதிகரிப்பதை நோக்கமாக கொள்வோம். வாக்கு என்பது உரிமை மட்டுமல்ல, பொறுப்புமாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு நாடு என்ற முறையில் நாம் சிந்தித்து, கூட்டாட்சியின் மூன்று அடுக்குகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதில் பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

70 ஆண்டுகளில் முதன்முறையாக 2019 பொதுத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் 0.17 சதவீத வாக்களித்திருப்பதற்கு திரு.நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார். (1962 பொதுத் தேர்தலில் பெண்களை விட ஆண்கள் 16.71 சதவீதம் கூடுதலாக வாக்களித்திருந்தனர்)

“நமது தேர்தலை அனைவரையும் உள்ளடக்குவதாக எளிதில் அணுகக் கூடியதாக அனைவரும் பங்கேற்பதாக மாற்றுவதுஎன்பதை மையப்பொருளாக கொண்டு 12-வது தேசிய வாக்காளர் தினத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1950 ஜனவரி 26-லிருந்து அரசியல் சட்டத்துடன் குடியரசாக நாடு மாறுவதற்கு ஒருநாள் முன்னதாக 1950 ஜனவரி 25 அன்று தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நிலையில், ஜனவரி 25 வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

***************(Release ID: 1792524) Visitor Counter : 215