பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை நாடு கொண்டாடுகிறது


பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 24 JAN 2022 8:52AM by PIB Chennai

இந்தியாவின் பெண் குழந்தைகளுக்கு ஆதரவும், வாய்ப்புகளும் அளிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று நாட்டில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை பற்றி விழிப்புணர்வை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையம் வழியாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளின் மெச்சத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக 2022-க்கான பிரதமரின் தேசிய பாலர் விருது பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும். இந்த விருது பெற்றவர்களுடன் மாண்புமிகு பிரதமர் இணையம் வழியாகக் கலந்துரையாடுவார். இந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும், மாவட்ட தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை இந்த நிகழ்வின் போது பிரதமர் வழங்குவார். கொவிட் நிலைமை காரணமாக கடந்த ஆண்டு சான்றிதழ் பெற இயலாதவர்களுக்கும் இந்த நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்கான பிரதமரின் பாலர் விருது பெறுவோருக்கு ரொக்கப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இது வெற்றியாளர்களின் வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும்.

இணையம் வழியிலான கருத்தரங்குகள்

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக யுனிசெஃப் ஏற்பாடு செய்துள்ள இணைய வழியிலான ‘கன்யா மஹோத்சவ் விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும்.

பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க புதிய கண்டுபிடிப்புகளை செய்திருக்கும் இளம் பெண்களுடன் மத்திய ஜவுளி, தொழில் மற்றும் வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் காணொலி காட்சியில் கலந்துரையாடுவார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்த இளம் பெண் தொழில் முனைவோருடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு.ஜிதேந்திர சிங் இணையம் வழியாக கலந்துரையாடுவார்.

இதே போல் மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இணையக் கருத்தரங்கில் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரைகள் இடம்பெறும்.

“இந்தியாவில் பதின்பருவ பெண்களின் தேவைகளுக்குத் தீர்வு காணுதல்என்பது குறித்து மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் (என்ஐபிசிசிடி) இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பதின்பருவத்தில் சத்துள்ள உணவு அருந்துதல், கல்வி மற்றும் முன்னேற்றத்தில் பதின்பருவ பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பதின்பருவ பெண்களிடையே உளவியல் ரீதியில் ஏற்படும் மாற்றங்களின் முக்கியத்துவம் குறித்து இந்தக் கருத்தரங்க உரைகள் இடம் பெறும்.

‘பெண் குழந்தைகளின் சட்டப்படியான உரிமைகள் என்ற தலைப்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் இணையவழி கருத்தரங்கை நடத்த உள்ளது. இதில் ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.கல்பேஷ் சத்யேந்திர ஜவேரி முக்கிய உரை நிகழ்த்துவார்.

பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 405 மாவட்டங்கள், கிராம சபை / மகளிர் சபை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. பெண் குழந்தைகளின் மாண்பு குறித்து பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான தலைப்புகளில் சுவரொட்டிகள் / முழக்கம் எழுதுதல் / வரைதல் / வண்ண ஓவியம் தீட்டுதல் போன்ற போட்டிகள் பள்ளிகளிடையே நடத்தப்படும். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்பதில் உள்ளூர் முக்கியத்துவம் பெற்றவர்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792050

***************


(Release ID: 1792105) Visitor Counter : 1483