சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புலிகள் பாதுகாப்பு குறித்த நான்காவது ஆசிய அமைச்சர்கள் நிலை மாநாட்டில் இந்தியாவின் நிலையை திரு பூபேந்தர் யாதவ் எடுத்துரைத்தார்

Posted On: 21 JAN 2022 3:15PM by PIB Chennai

இயற்கை வளங்களை சார்ந்திருக்கும்  சமூகத்தின் முக்கியமான அம்சம் புலிகள் பாதுகாப்பு என்றும் மக்களின் செயல்பாடு  இந்தியாவின் புலிகள் பாதுகாப்பில் முக்கியமான இடத்தைப்  பெற்றுள்ளது என்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் கூறினார். புலிகள் மீட்புத் திட்டம்புலிகள் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு குறித்த  முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் முக்கிய நிகழ்வான புலிகள் பாதுகாப்பு குறித்த 4ஆவது ஆசிய அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பதற்காக மலேசியாவுக்கும் உலகளாவிய புலிகள் அமைப்புக்கும் திரு யாதவ் பாராட்டு தெரிவித்தார். புலிகள் வாழ்விடத்திற்கான அடிப்படைக்  கட்டமைப்பு விஷயத்தில் முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் மலேசிய அரசின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

 இந்த ஆண்டு பிற்பகுதியில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்  நகரில் நடைபெறவுள்ள உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான புதுதில்லி பிரகடனத்தை இறுதிப்படுத்துவதை நோக்கி புலிகள் அதிகமுள்ள நாடுகளை இந்தியா கேட்டுக்கொள்வதாக  அமைச்சர் கூறினார். உலகளாவிய புலிகள் குறித்த உச்சி மாநாட்டுக்கான உரையாடலுக்கு,  2010 புதுதில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு முந்தைய கூட்டத்தில் நகல் பிரகடனம் இறுதி செய்யப்பட்டது.

புலிகளின் எண்ணிக்கையை 2022க்குள் இரண்டு மடங்காக்க  வேண்டும் என்ற இலக்கினை 4 ஆண்டுகளுக்கு  முன்னதாக 2018லேயே இந்தியா சாதித்துவிட்டதாக  திரு யாதவ் தெரிவித்தார். இந்த வெற்றி   சிங்கம், டால்ஃபின், சிறுத்தை, பனிச்சிறுத்தை போன்றவற்றையும் மற்றும் இதர சிறிய வகை வன விலங்குகளையும்  அதிகரிப்பதில்  பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் புலிகள் பாதுகாப்புக்கு 2014ல் ரூ. 185 கோடி என்றிருந்த பட்ஜெட் ஒதுக்கீடு 2022ல் ரூ. 300 கோடியாக  அதிகரித்துள்ளது என்ற தகவலை தெரிவித்த அமைச்சர், இந்தியாவில் உள்ள 14 புலிகள் காப்பகங்கள் சர்வதேச சிஏ/டி எஸ் அங்கீகாரத்துடன் விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளன என்றும்  மேலும் சில புலிகள் காப்பகங்கள் சிஏ/டிஎஸ்  அங்கீகாரம் பெற முயற்சி செய்வதாகவும் கூறினார்.

புலிகள் பாதுகாப்பில் மிகவும் முக்கியமாக  விளங்குகின்ற முன்களப் பணியாளர்களாக விளங்கும் ஒவ்வொரு ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும்  தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமீபத்திய திட்டத்தின் கீழ்  ரூ 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுவதாகவும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791473

****


(Release ID: 1791568) Visitor Counter : 694