பிரதமர் அலுவலகம்

உலகப் பொருளாதார அமைப்பில் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ குறித்த பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 17 JAN 2022 10:12PM by PIB Chennai

வணக்கம்!

உலகப் பொருளாதார அமைப்பில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்நாளில் எச்சரிக்கையோடு இந்தியா மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெறும் ஓராண்டு காலத்திற்குள் 160 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நம்பிக்கையோடும் இந்தியா இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.

நண்பர்களே,

இந்தியா போன்ற வலுவான ஜனநாயகம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் நம்பிக்கை பூங்கொத்து என்ற அழகிய பரிசை அளித்துள்ளது. இந்தியர்களாகிய நாங்கள் எங்கள் ஜனநாயகத்தில் ஊசலாட்டம் இல்லாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம். இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறனுடன் 21 ஆம் நூற்றாண்டில் அதிகாரமளிக்கும் தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். பல மொழிகளையும், பல கலாச்சாரங்களையும் கொண்டு மகத்தான சக்தியாக வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்காகவும் வாழ்கிறார்கள்.

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும், அத்தியாவசிய மருந்துகளையும் வழங்கியதன் மூலம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா பாதுகாத்துள்ளது. உலகத்திற்கு இந்தியா இப்போது மருந்தகமாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உருவாக்கிய, ஏற்றுக் கொண்ட டிஜிட்டல் கட்டமைப்பு இன்று இந்தியாவின் மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது. கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கான ஆரோக்கிய சேது தடுப்பூசிக்கான கோவின் இணைய தளம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இந்தியாவின் பெருமிதமாகும்.

நண்பர்களே,

இந்தியா ஒரு காலத்தில் லைசென்ஸ் ராஜ்ஜியமாக இருந்தது. பெரும்பாலான விஷயங்கள் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன. அந்த நாட்களில் இந்தியாவின் வணிகம் செய்வது சவால்களாக இருப்பதை நான் புரிந்து கொண்டேன். இந்த சவால்கள் அனைத்தையும் வெல்வதற்கு நாங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்தோம். இதனால் தற்போது எளிதாக வணிகம் செய்வதை இந்தியா ஊக்கப்படுத்துகிறது வணிகத்தில் அரசின் தலையீட்டைக் குறைக்கிறது. பெரு நிறுவன வரிகளை எளிமையாக்கி குறைத்திருப்பதன் மூலம் உலகில் மிகவும் போட்டித்தன்மை உள்ளதாக அதனை இந்தியா மாற்றியிருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 75,000-க்கும் அதிகமான விதிமுறைகளை நாங்கள் நீக்கியிருக்கிறோம். ட்ரோன்கள், விண்வெளி, புவி சார்ந்த வரைபடம் உருவாக்குதல் போன்ற துறைகளை இந்தியா முறைப்படுத்தியுள்ளது, தகவல் தொழில்நுட்பம், பிபிஓ போன்ற துறைகள் தொடர்பான காலத்திற்கு ஒவ்வாத தொலை தகவல் தொடர்பு ஒழுங்குபடுத்தும் விதிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

நண்பர்களே,

தற்சார்பு என்ற தனது தேடலுக்காக நடைமுறைகளை எளிதாக்குவதில் மட்டும் இந்தியா கவனம் செலுத்தவில்லை. முதலீடு மற்றும் உற்பத்திக்கும் ஊக்கமளிக்கிறது. 14 துறைகளில் 26 பில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் அமலாக்கப்படுகின்றன. அடுத்த 25 வருடங்களுக்கான இலக்குகளை மனதில் கொண்டு இந்தியா கொள்கைகளை உருவாக்குகிறது.

நண்பர்களே,

இது போன்ற முயற்சிகளுக்கு இடையே நமது வாழ்க்கை முறை பருவநிலைக்கு பெரும் சவாலாக இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது. ‘தூக்கி எறி‘ என்ற கலாச்சாரமும், நுகர்வு முறையும் பருவநிலை மாற்றத்தை மிகவும் கடுமையாக்குகிறது. பருவநிலை நெருக்கடியைக் கையாள்வதற்குப் பயன்படுவது சுற்றுச்சூழலை நீடிக்க செய்யவும் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (லைஃப்) உலகளாவிய மக்கள் இயக்கமாக மாற்றப்படுவது அவசியமாகும்.

மாறி வரும் சூழலில் உலக ஒழுங்கின் சவால்களை கையாளும் நிலையில், பல வகைப்பட்ட உலக அமைப்புகள் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மாற்றங்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகளிலும் மாற்றங்கள் தேவை. எனவே ஒவ்வொரு ஜனநாயக நாடும் இந்த அமைப்புகளின் சீர்திருத்தங்களை வற்புறுத்துவது அவசியம். இதுதான் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைக் கையாள்வதற்கு உதவும். டாவோஸ் விவாதங்களின் போது இந்த திசை வழியில் ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

புதிய சவால்களுக்கு இடையே உலகிற்கு இன்று புதிய பாதைகளும், புதிய தீர்மானங்களும் தேவைப்படுகின்றன. முன்னெப்போதையும் விட கூடுதலாக உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கு இடையேயும் கூடுதல் ஒத்துழைப்பு இன்று தேவைப்படுகிறது. இது எதிர்காலத்திற்கான சிறந்த வழிமுறையாகும். டாவோஸ் விவாதம் இந்த உணர்வை விரிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் இணையம் வழியாக சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.

***



(Release ID: 1790704) Visitor Counter : 172