வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த வேண்டும்: திரு. பியூஷ் கோயல்

Posted On: 14 JAN 2022 2:11PM by PIB Chennai

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் (விசி) கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் திரு .பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.

 

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை ஏற்பாடு செய்த சர்வதேச மூலதன நிதியங்களுடனான நான்காவது வட்டமேசை மாநாட்டிற்கு தலைமை ஏற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

 

புதிய துறைகளில் முதலீடு செய்து ஊக்குவிக்குமாறும், இந்திய தொழில்முனைவோர் உருவாக்கிய அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்து மேம்பாட்டிற்கான நிபுணத்துவத்தை வழங்கி அதிக அளவில் முதலீடுகளை செய்யுமாறும் மூலதன நிதியங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

55 துறைகளில் பரவியுள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவதாகவும், இவற்றில் 45 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து உருவாகியுள்ளதாகவும், 45% நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குனராவது  இருப்பதாகவும் இந்திய ஸ்டார்ட்அப் சூழலியலின் பன்முகத்தன்மை, பரவல் மற்றும் உள்ளடக்கலுக்கு சான்றுகளாக இவை திகழ்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

ஸ்டார்ட் அப் சூழலுக்காக மட்டும் 49 ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டிருப்பதாகவும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்தவும், மூலதனம் திரட்டுவதை எளிதாக்க உதவவும், தாக்கல் சுமைகளை குறைப்பதையும் இவை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வாரத்தின் ஒரு பகுதியாக காணொலி மூலம் இந்த வட்டமேசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட சர்வதேச மூலதன நிதியங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1789898

****(Release ID: 1789942) Visitor Counter : 253