வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

Posted On: 13 JAN 2022 2:42PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலினுடன், புதுதில்லியில் இன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கினார். இருநாட்டு பிரதமர்கள் திரு. நரேந்திர மோடி, திரு. போரிஸ் ஜான்சன் ஆகியோர் 2021-ம் ஆண்டு முடிவு செய்த  இலக்கை எட்டும் வகையிலான இந்த ஒப்பந்தம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. பியூஷ் கோயல், துடிப்பு மிக்க ஜனநாயக நாடுகளான இந்தியாவும், பிரிட்டனும், நமது வரலாறு மற்றும் செழுமைமிக்க கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்ட கூட்டாண்மை கொண்டவை என்றார். பிரிட்டனில் பெருமளவில் உள்ள இந்திய வம்சாவளியினர் இருதரப்பு உறவை விரிவுபடுத்தும் பாலமாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தை, நமது தோல், ஜவுளி, ஆபரணங்கள், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்ப்பதாக திரு. கோயல் தெரிவித்தார். இந்தியாவின் 56 கடல்சார் அலகுகளுக்கு பெறப்பட்டுள்ள அங்கீகாரத்தின் மூலம், கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

மருந்து துறையில் பெரும் ஏற்றுமதிக்கான வளம் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் பல்வேறு துறைகளில் வர்த்தகம் அதிகரிப்பதால், நேர்முக, மறைமுக வேலைவாய்ப்புக்களும் அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்

****



(Release ID: 1789642) Visitor Counter : 256