பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இ-நிர்வாகம் குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை ஐதராபாதில் தொடங்கி வைப்பார்

Posted On: 06 JAN 2022 3:45PM by PIB Chennai

மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறை தீர்ப்புத் துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், தெலங்கானா மாநில அரசுடன் இணைந்து 2022 ஜனவரி 7, 8 தேதிகளில் 2020-21-க்கான இ-நிர்வாகம் குறித்த 24-வது கருத்தரங்கிற்கு ஐதராபாதில் ஏற்பாடு செய்துள்ளன.   ‘இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம் : பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் டிஜிட்டல் நிர்வாகம்’ என்பது இந்தக் கருத்தரங்கின் மையப் பொருளாகும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக இணை அமைச்சரும், ஊழியர் நலன், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சரும், அணுசக்தித் துறை, விண்வெளித்துறை, இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை விருந்தினராக இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார்.  தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு கே டி ராமராவ் தலைமை தாங்குவார்.

2021-க்கான இ-நிர்வாக தேசிய விருதுகள் 6 வகைமைகளில் மத்திய, மாநில, மாவட்ட அளவில் 26 இ-நிர்வாக முன்முயற்சிகளுக்கும், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும்  பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.  12 தங்கம், 13 வெள்ளி, 1 நடுவர் விருது ஆகியவை இதில் அடங்கும்.

இந்தக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் 6 துணைத்தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.

·      தற்சார்பு இந்தியா : அனைவருக்குமான பொதுச் சேவைகள்

·      புதிய கண்டுபிடிப்பு – தளமயமாக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்.

·      (மத்திய / மாநில அளவில்) தங்கப்பதக்கம் வென்றவர்களின் உரைகள்

·      நல்ல நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் வாழ்க்கையை எளிமையாக்குதல்.

·      அரசு நடைமுறையை  மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் அரசு நடைமுறையில் குடிமக்கள் பங்கேற்பு.

·      இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம் – டிஜிட்டல் பொருளாதாரம் (டிஜிட்டல் பணப்பட்டுவாடா – குடிமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல்)

இந்தக் கருத்தரங்கில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளோடு 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன்பிரதேசங்களின் பிரதிநிதிகளும் இணையவழியில் கலந்துகொள்வார்கள்.  நேரடியாகக் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இ-நிர்வாகத் துறையில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் விருது வென்றவர்களின் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெறும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787999

------



(Release ID: 1788040) Visitor Counter : 268