புதிய கொரோனா தொற்றுப் பரவலை சமாளிப்பதில், கடந்த கால அனுபவங்களை பின்பற்றி அவசர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்தல் ஆகிய விதிமுறைகளை எல்லா காலத்திலும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய வம்சா வளி அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 15 ஆவது உலக சுகாதார உச்சிமாநாட்டில் குடியரசு துணைத் தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரை வெளியிடப்பட்டது. இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும், தங்களது இருப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவதாக அவர் பாராட்டினார். “வசுதைவக் குடும்பகம்” என்னும் மதிப்பை உலகம் முழுவதும் பறைசாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று வலியுறுத்திய திரு நாயுடு, பெற்றோர்கள் தங்கள் பதின்பருவ குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டாமல் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவ வசதி, கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்காத நிலை உள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இதில் உள்ள இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட கோர்பேவாக்ஸ், கோவோவாக்ஸ் தடுப்பூசிகளை அமெரிக்க அமைப்புடன் சேர்ந்து இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்திய-அமெரிக்க சுகாதார ஒத்துழைப்பு நிச்சயம் இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787619
***************