பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார் - நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

Posted On: 25 DEC 2021 5:21PM by PIB Chennai

நிர்வாகச்  சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்  துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை , நல்லாட்சி தினத்தன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று வெளியிட்டார்.

இதில் நீதி  மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப்  பிரிவில்  ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக்  காத்திருந்ததாக கூறினார்.  மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

 

நல்லாட்சிக்கு உதாரணம் அளித்த திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்  பணியாளர், ஒய்வூதியர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம்  மோடி அரசின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது என்றார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை.

நல்லாட்சி குறியீடு-2021 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது, அதாவது (i) பிற மாநிலங்கள் - குழு ஏ; (ii) பிற மாநிலங்கள் - குழு பி; (iii) வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்; மற்றும் (iv) யூனியன் பிரதேசங்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785140

                                                                                                **********************



(Release ID: 1785166) Visitor Counter : 1190