பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் டிசம்பர் 23 அன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தி அப்பகுதி விவசாயிகளுக்கு உதவும் விதமாக ‘பனாஸ் பால் பண்ணைக்கு’ பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கிராமப்புற குடியிருப்பு உரிமை ஆவணம் ‘கரோனி’யை பிரதமர் வழங்க உள்ளார்
வாரணாசியில் ரூ.870 கோடிக்கும் மேல் மதிப்புடைய 22 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, சாலைக் கட்டமைப்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது
வாரணாசியை 360 டிகிரி மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு புதிய திட்டங்கள் வலுசேர்க்கும்

Posted On: 21 DEC 2021 7:04PM by PIB Chennai

தமது வாரணாசியின் தொகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடர் முயற்சிகளை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 23 டிசம்பர் 2021 அன்று பிற்பகல் 1 மணி அளவில், வாரணாசி செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

வாரணாசியின் கர்கியாவோன் பகுதியில் உள்ள உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணைய உணவுப் பூங்காவில், ‘பனஸ் பால் பண்ணைக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.  30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்தப் பால்பண்ணை சுமார் ரூ.475 கோடி செலவில் கட்டப்படுவதுடன், தினந்தோறும் 5 லட்சம் லிட்டர் பாலை குளிரூட்டும் வசதிகளை பெற்றிருக்கும். இது அப்பகுதியின் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கும் உதவிகரமாக அமையும். பனஸ் பால் பண்ணையுடன் தொடர்புடைய 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட  பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் ரூ.35 கோடி போனஸ் தொகையையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் செலுத்த உள்ளார்.

வாரணாசி ராம்நகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஆலைக்காக பயோ கேஸ் (உயிரி எரிவாயு) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த மின் உற்பத்தி நிலையம் அந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தை மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக மாற்றும்.

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ள பால் பொருட்களுக்கான மதிப்பீடு திட்டத்திற்குரிய இணையதளத்தை தொடங்கி வைத்து இலட்சினையையும் பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். இந்திய தர நிர்ணய ஆணையம் மற்றும் தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் இலட்சினைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய இலட்சினையுடன் கூடிய தரக் குறியீடு, பால் பொருள் சான்றிதழ் நடைமுறைகளை எளிதாக்குவதுடன் பால் பொருட்களின் தரம் குறித்து பொது மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

அடித்தட்டு மக்களுக்கான நில உரிமைப் பிரச்சினைகளைக் குறைக்கும் மற்றொரு முயற்சியாக, மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த  இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்போருக்கு ‘கரோனி‘ எனப்படும் கிராமப்புற குடியிருப்பு உரிமை ஆவணங்களை பிரதமர் காணொலி வாயிலாக வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வாரணாசியில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.870 கோடிக்கும் மேல் மதிப்புடைய 22 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்தத் திட்டங்கள் வாரணாசியை 360 டிகிரி அளவிற்கு மாற்றியமைக்கும் நோக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.

வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். பழைய காசி வார்டுகளை மறு நிர்மாணித்தல், பேணியாபேக் பகுதியில் வாகன நிறுத்துமிடம், மற்றம் மேல்மட்ட பூங்கா, இரண்டு குளங்களை அழகுப்படுத்துதல், ரம்னா கிராமத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் மற்றும்  ஸ்மார்ட்டி சிட்டி திட்டத்தின் கீழ் 720 இடங்களில் அதிநவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது ஆகிய ஆறு திட்டங்கள் இதில் அடங்கும்.

ரூ.107 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசிரியர் கல்விக்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்கலைக் கழக இடைமையம்  மற்றும் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட திபெத்திய உயர் கல்விக்கான மத்திய நிறுவனத்தின் ஆசிரியர் கல்வி மையம் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கரூண்டி தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர் குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளும் பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

சுகாதாரத் துறையில், மகாமானா பண்டிட் மதன் மோகன் மாளைவியா  புற்றுநோய் மையத்தில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.  பத்ராசியில் ஐம்பது படுக்கை வசதி கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் ஆயுஷ் இயக்கத்தின் கீழ் பிந்த்ரா தாலுக்காவில் ரூ.149 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரயாக் ராஜ் மற்றும் பதோகியில் உள்ள இரண்டு 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும்  திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இது வாரணாசிக்கான போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.

இந்தப் புனித நகரில் சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக வாரணாசியில் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜீ கோவில் துறவி கோவர்தனுடன் தொடர்புடைய சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளையும் பிரதமர்  தொடங்கி வைக்க உள்ளார்.

இது தவிர, வாரணாசி தெற்காசிய மண்டல மையத்தில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிவேக இனப்பெருக்க மையம், பயாக்பூர் கிராமத்தில் மண்டல தர பரிசோதனை ஆய்வுக் கூடம் மற்றும் பிந்த்ரா தாலுக்காவில் வழக்கறிஞர் அலுவலக கட்டடம் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783981

 

-------



(Release ID: 1784017) Visitor Counter : 262