பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சுகோய் 30 எம்கே-I மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது

வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, பிரமோஸ், இந்திய விமானப்படை மற்றும் தொழில் துறைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 08 DEC 2021 12:13PM by PIB Chennai

வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பகுதியிலிருந்து டிசம்பர் 8, 2021 அன்று காலை 10.30 மணிக்கு சுகோய் 30 எம்கே-I சூப்பர் சானிக் போர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. 

பிரமோஸ் மேம்பாட்டில் இது முக்கியமான மைல்கல்லாகும்.  உள்நாட்டிலேயே வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளின் தொடர்ச்சியான உற்பத்தி முறையை இது உறுதிப்படுத்தியுள்ளது.  இந்தப் பரிசோதனையின் போது  கட்டமைப்பில் ஒருங்கிணைப்பும், செயல்பாட்டில் திறனும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை கடைசியாக ஜூலை 2021 –ல் நடத்தப்பட்டது. 

இந்த வெற்றிகரமான பரிசோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பிரமோஸ், இந்திய விமானப்படை, தொழில்துறை ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை சோதனை நடைமுறையை மேம்படுத்தி சோதனைகளுக்கு உட்படுத்தி உற்பத்தி செய்து படைப்பிரிவில் இணைத்ததில் டி ஆர் டி ஓ-வின் பல்வேறு சோதனைக் கூடங்கள், கல்வி சார் நிறுவனங்கள், தரஉத்தரவாதம்   மற்றும் சான்றளிப்பு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய விமானப்படை ஆகியவை பங்கேற்றதாக பாதுகாப்புத் துறை செயலாளரும் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு), டி ஆர் டி ஓ தலைவருமான டாக்டர் ஜி. சத்தீஷ்ரெட்டி கூறினார்.

பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை மேம்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதில் இந்தியாவும் (டி ஆர் டி ஓ), ரஷ்யாவும் கூட்டு முயற்சியில் உள்ளன. 

******


(Release ID: 1779176) Visitor Counter : 370