நிதி அமைச்சகம்

தமிழ்நாட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கைகள்

Posted On: 07 DEC 2021 12:56PM by PIB Chennai

சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நகைகள், ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் 2 பிரபல குழுமங்களின் மீது 01.12.2021 அன்று சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். மொத்தம் 37 இடங்களில் இவை நடைபெற்றன.

முதல் குழுமத்தில் நடைபெற்ற சோதனையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும்  பிற ஆதாரங்களின் வாயிலாக விற்பனையை குறைத்து காட்டியது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக இவ்வாறு செய்துள்ளதன் மதிப்பு ரூ 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது மேலும், கணக்கில் வராத பணத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி மற்றும் நகைகள் வாங்கியதும் ண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது குழுமத்தைப் பொறுத்தமட்டில், ரூ 80 கோடிக்கு போலி ரசீதுகளை பெற்று வரிக்குரிய வருவாயை குறைத்து காட்டியிருந்தது தெரியவந்தது. கணக்கில் வராத தங்கம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. நகைகளின் செய்கூலியை அதிகப்படுத்தி காட்டியிருந்ததும், ரூ 7 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வாடகை ரசீதுகள் மற்றும் ஸ்கிராப் விற்பனையும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு குழுமங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ 10 கோடி ரொக்கம் மற்றும் சுமார் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள்/தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778753



(Release ID: 1778904) Visitor Counter : 201