பிரதமர் அலுவலகம்

ஜவாத் புயலை எதிர்கொள்ள தயார்நிலைகள் பற்றிய உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்

மக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டார்
அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; தடங்கல் ஏற்பட்டால் அவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டும்: பிரதமர்
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமாக, ஒருங்கிணைந்து, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களும், முகமைகளும் பணியாற்றுகின்றன
படகுகள், மரம்வெட்டும் கருவிகள், தொலைத்தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னபிறவற்றுடன் என்டிஆர்எப்-ன் 29 அணிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன;
33 அணிகள் தயார் நிலையில் உள்ளன
நிவாரணம், தேடுதல், மீட்பு நடவடிக்கைகளுக்குக் கப்பல்களையும், ஹெலிகாப்டர்களையும் இந்தியக் கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளன
ராணுவத்தின் விமானப்படை மற்றும் பொறியியல் பிரிவு அதிரடிப்படைகள் பணியமர்த்த தயார் நிலையில் உள்ளன
கிழக்குக் கடலோரத்தில் பேரிடர் நிவாரண அணிகளும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன
மக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரி

Posted On: 02 DEC 2021 3:39PM by PIB Chennai

ஜவாத் புயல் உருவாகக்கூடும் என்பதால் ஏற்பட்டுள்ள  நிலையைக் கையாள மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளின் முன் தயாரிப்புப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்த உயர்நிலைக் கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

மக்கள் பாதுகாப்புடன்  அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மின்சாரம், தொலைத்தகவல் தொடர்புகள், சுகாதாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்தின் பராமரிப்பையும் உறுதி செய்யுமாறும் இடையூறு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அவற்றை சரிசெய்யுமாறும் அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டார். மேலும் அத்தியாவசிய மருந்துகளைப் போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள அவர்களுக்கு உத்தரவிட்டதோடு அவற்றை விநியோகிக்க  தடையில்லா ஏற்பாட்டை செய்யுமாறும் உத்தரவிட்டார். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டிற்கும் அவர் உத்தரவிட்டார்.

 வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஜவாத் புயலாக மாறக்கூடும் என்றும் மணிக்கு 300 கிமீ வேக காற்றுடன் 2021 டிசம்பர் 4, சனிக்கிழமை அன்று காலையில் வடக்கு ஆந்திரப் பிரதேசம்- ஒடிசா கடற்கரையை  அடையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவ்வப்போது வானிலை முன்னறிவிப்பு செய்திகளைத் தொடர்ந்து ஐஎம்டி வெளியிட்டு வருகிறது.

தற்போதைய நிலைமை மற்றும் தயாரிப்புப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கடலோர மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், முகமைகள் ஆகியவற்றுடன் அமைச்சரவை செயலாளர் ஆய்வு நடத்தினார். உள்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் நிலைமையை ஆய்வு செய்து வருவதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய முகமைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முதலாவது தவணையை உள்துறை அமைச்சகம் ஏற்கனவே விடுவித்துள்ளது. படகுகள், மரம்வெட்டும் கருவிகள், தொலைத்தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னபிறவற்றுடன் என்டிஆர்எப்-ன் 29 அணிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; 33 அணிகள் தயார் நிலையில் உள்ளன.

நிவாரணம், தேடுதல், மீட்பு நடவடிக்கைகளுக்கு கப்பல்களையும், ஹெலிகாப்டர்களையும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை பணியில் ஈடுபடுத்தியுள்ளன. ராணுவத்தின் விமானப்படை மற்றும் பொறியியல் பிரிவு அதிரடிப்படைகள் பணியமர்த்த தயார் நிலையில் உள்ளன. கடற்கரை பகுதி நெடுக கண்காணிப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பை நடத்தி வருகின்றன. கிழக்கு கடலோரப்பகுதிகளில் பேரிடர் நிவாரண அணிகளும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

 மின்துறை அமைச்சகம் அவசர கால நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன. மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மின்மாற்றிகள் மற்றும் பிற சாதனங்களை தயார் நிலையில் வைத்துள்ளது. தகவல் தொடர்புகள் அமைச்சகம், தொலைத்தகவல் தொடர்பு கோபுரங்கள், அனைத்து இணைப்பகங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இடையூறு ஏற்பட்டால் சரி செய்ய முழு தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்படக்கூடும் என்றுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கொவிட் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு தேவை என்றும் சுகாதாரம் மற்றும்  குடும்ப நல அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது.

துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் அனைத்து கப்பல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவசரகால கப்பல்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்கரை அருகே உள்ள ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன பிரிவுகள் போன்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில முகமைகளுக்கு என்டிஆர்எப் உதவி செய்து வருகிறது. புயல் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இயக்கங்களும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

 இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமருக்கான முதன்மைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், என்டிஆர்எப் தலைமை இயக்குனர், ஐஎம்டி தலைமை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

****



(Release ID: 1777390) Visitor Counter : 261