உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரில் ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் பூமி பூஜை நடத்தினார்

Posted On: 22 NOV 2021 6:52PM by PIB Chennai

மணிப்பூரில் ஒரு காலத்தில் ஆயுதக்கும்பல்கள் தீவிரவாதத்தை பரப்பியது போது, அப்போதைய அரசுகளும் இதில் ஈடுபட்டன.  ஆனால் திரு பைரன்சிங் தலைமையின் கீழான அரசு சட்டம், ஒழுங்கு மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக  திரு நரேந்திர மோடி மற்றும் பைரன் சிங் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் மணிப்பூரின் முன்னேற்றத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மணிப்பூரில் பெருமளவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தங்கள் மீது கவனம் செலுத்தி வருவதாக மலைக்கிராம மக்கள் முதல் முறையாக உணரத் தொடங்கி உள்ளனர். 

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு இன்று காணொலி மூலம் பூமி பூஜை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர்  முதலமைச்சர் திரு என் பைரன் சிங், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், ராணி அன்னை கைதின்லியு, பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு பூமி பூஜை நடத்தும் வாய்ப்பை பெற்றதாகக் கூறினார்.  நமது  விடுதலைப் போராட்ட வீரர்களின் தேசப்பக்தி, புனிதப் பணிகள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பல விடுதலைப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடி நாட்டைப் பெருமைப்படுத்தியதாக திரு அமித் ஷா தெரிவித்தார். மணிப்பூரில் மகாராஜா குல்சந்திர சிங், மற்றும் அவரது தோழர்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மவுண்ட் ஹாரியட் என்னுமிடத்தில் சிறை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மகாராஜா குல்சந்திர சிங் தீரத்துடன் வடகிழக்குப் பகுதியில் பிரிட்டிஷாரை எதிர்த்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் மவுண்ட் ஹாரியட்டுக்கு மணிப்பூர் மவுண்ட் என்று பெயர் சூட்டியுள்ளோம்.  அமையவிருக்கும் அருங்காட்சியகம் மணிப்பூருக்கு மட்டுமில்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் கவரும் மையமாக திகழும் என்று கூறிய அமைச்சர், விடுதலைப் போராட்டத்துக்காக யாராவது உண்மையிலேயே தியாகம் செய்ததாக கருதப்பட்டால் அவர்கள் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் தான் என்று தெரிவித்தார்.

ராணி கைதின்லியு குறித்து நினைவு கூர்ந்த திரு அமித் ஷா, அவருக்கு புகழாரம் சூட்டினார். அவர் பிறப்பில் ராணியாக இல்லாவிட்டாலும், ராணி என்று யாரும் பெயர் சூட்டாவிட்டாலும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று நாடே அவருக்கு மரியாதை செலுத்துகிறது. அரசு சூட்டும் பெயர்களை சில ஆண்டுகளில் மறந்துவிடுவது உண்டு. ஆனால் மக்கள் சூட்டும் பெயர்கள் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாட்டின் விடுதலைக்காக முதன் முதலில் குரல் எழுப்பிய பழங்குடியினத் தலைவர் பகவன் பிர்சா முண்டாவின் பெயரை எவ்வாறு மறக்க முடியும்.

ராணி கைதின்லியு மணிப்பூரின் ஒரு கிராமத்தில் பிறந்தார்.  13 வயதில் அவர் ஜடோநாங்கின் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினார். ஜடோநாங்கின் உயிர்த் தியாகத்திற்கு பின்னர் அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கிய அவர், விடுதலை இயக்கத்தை தீவிரமாக நடத்தினார். வடகிழக்குப் பகுதியின் தொலை தூர மலைப்பகுதிகளில் வசித்த ஒரு சிறு பெண் உலகின் பெரிய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக சவால் விடுத்தார். இன்று அவரை நாடு நினைவு கூர்கிறது. அவரது பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி  பிரதமர் 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அவரது பெயரில் ஒரு  ரோந்துப் படகுக்கு இந்திய கடலோரக் காவல் படை சூட்டியது. மணிப்பூரில் அமைய உள்ள அருங்காட்சியகம் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. வடகிழக்கு பழங்குடியினப் பகுதிகளின் தேசபக்தியை இந்த அருங்காட்சியகம் மீண்டும் ஒரு முறை தட்டி எழுப்பும் என்பது நிச்சயம்.

------


(Release ID: 1774053) Visitor Counter : 312