தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும், திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்: 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் பேச்சு

Posted On: 20 NOV 2021 6:23PM by PIB Chennai

இந்தியாவை உலக சினிமாவின் மையமாகவும்திரைப்படங்கள் மற்றும் விழாக்களுக்கான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என கோவாவில் இன்று தொடங்கிய 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர்  கூறினார்.

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசியவதாவது:

இந்திய கதை, இந்தியர்களால் எழுதப்பட்டு விவரிக்கப்படுகின்றன. கூட்டு பன்முகத்தன்மையின்   இந்திய  சினிமா கலைடாஸ்கோப்’-ல்  பங்கு பெற வேண்டும் என்பதுதான்அனைத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் விடுக்கும் தகவல். இது வளர்ந்து வரும் கோடிக்கணக்கானோரின் குரலாக, புதிய முன்னேற்றங்களை எடுக்கவுள்ளது மற்றும் இந்த தசாப்தத்திலும் அதற்குப் பிறகும் வழிநடத்த தயாராகிறது.

திரைக்கதை உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்ற நாங்கள் எண்ணுகிறோம். இதற்காக பிராந்திய அளவில் திரைப்பட விழாக்களை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளோம்.

திரைப்பட தயாரிப்புக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கும் இடமாகவும் இந்தியாவை மாற்றுவதில்  நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் தொழில்நுட்ப திறமைசாலிகளை அதிகரித்து, உலக சினிமாவின் மையமாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளோம். திரைப்படங்கள் மற்றும் விழாக்களின் மையமாக இந்தியாவை மாற்றவும் எண்ணியுள்ளோம்.

உலகம் ஒரே குடும்பம் என்ற கருத்தை உடைய தேசத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம். என்ன மொழி பேசுகிறீர்கள், எந்த நாட்டிலிருந்து உங்கள் கதை வருகிறது மற்றும் உங்களின் நம்பிக்கை போன்றவை எல்லாம் முக்கியம் அல்ல. திரைப்படங்கள் நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது.

சினிமா உலகளாவிய மொழியை பேசுவதால், பிறரை ஈர்க்கும் திறனில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகின்றன. ஒரு நாட்டின் கலாச்சாரம், கொள்கை மற்றும் சமூக விதிமுறைகள் ஆகியவற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருக்கும்.

திரைப்பட கலையின் சிறப்பை வெளிப்படுத்தவும், பல நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களை சிறப்பாக புரிந்து கொண்டு அங்கீகரிக்கவும், உலக முழுவதும் நட்புறவையும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்  உலக சினிமாக்களுக்கான ஒருங்கிணைந்த தளத்தை அளிக்க, இந்திய சர்வதேச திரைப்பட விழா எண்ணுகிறது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நமது அரசின் தொலை நோக்கு, ஒரு நிகழ்ச்சியோடு முடிவடையவில்லை, இந்தியா 100வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்போது, இந்திய சர்வதேச திரைப்பட விழா எப்படியிருக்க வேண்டும் என்பதை பற்றியும் நினைக்கிறது.

திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நாம் டிஜிட்டல் யுகத்துக்கு சென்றுள்ளதால், இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

முதல் முறையாக, 52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் ஓடிடி தளங்களும் பங்குபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை முன்னிட்டு, இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க, வருங்கால 75 இளம் படைப்பாளிகளுக்கான போட்டி இந்த திரைப்பட விழாவில் நடத்தப்படுகிறது. இதற்காக நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழாவும் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதில் 5 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பிரபல நடிகை ஹேமா மாலினிக்கு, இந்தாண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை, மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வழங்கினார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு இந்த விருது 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். 

சர்வதேச சினிமாவில் சிறந்து விளங்கிய திரு ஸ்டீவன் சபோ மற்றும் மார்ட்டின் ஸ்கார்செசே ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருதையும் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வழங்கினார்.

இந்நிகழச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் திரு. பிரமோத், சாவந்த், தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வா சந்த்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

****



(Release ID: 1773527) Visitor Counter : 226