பிரதமர் அலுவலகம்

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 15 NOV 2021 5:55PM by PIB Chennai

மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு.நரேந்திர சிங் தோமர், திரு.ஜோதிர் ஆதித்த சிந்தியா, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு.வீரேந்திர குமார், திரு.பிரகலாத் ஜோஷி, திரு.பகன்சிங் குலாஸ்தே, திரு.எல்.முருகன் அவர்களே, மத்தியப் பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே, பகவான் பிர்சா முண்டா பிறந்தநாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் ஒட்டு மொத்த நாட்டிற்கும். ஒட்டு மொத்த பழங்குடியின சமுதாயத்திற்கும் முக்கியமான நாளாகும். இன்று, இந்தியா முதலாவது பழங்குடியினர் கவுரவத் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  நாடு சுதந்திரமடைந்த பிறகு முதன் முறையாக பழங்குடியினர் சமுதாயத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் சுதந்திரப் போராட்டம் மற்றும் தேச நிர்மாணத்தில்  அவர்களது பங்களிப்பு நினைவுகூரப்படுவதுடன், அவர்கள் சிறப்பான முறையில் கவுரவிக்கப்படுகின்றனர். பழங்குடியின மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையை நாம் தொடர்ந்து பெற்று வருவதுடன் அந்த அன்பு மென்மேலும் வலுவடைந்து வருகிறது. நீங்கள் காட்டும் அன்பு, உங்களுக்காக அயராது பாடுபட எங்களுக்கு புத்துணர்வை அளிக்கிறது.

போபாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையம் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாமல், ராணி கமலாபதி அவர்களின் பெயரைச் சேர்த்ததன் மூலம் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரயில்வேயின் பெருமையும் கோண்ட்வானாவின் பெருமையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. நவீன ரயில்வே திட்டங்களின் அர்ப்பணிப்பு புகழ்பெற்ற வரலாறு மற்றும் வளமான நவீன எதிர்காலத்தின் சங்கமம் ஆகும். பழங்குடியினர் கவுரவ தினம் அன்று, இந்தத் திட்டங்களால் மத்தியப் பிரதேச மக்கள் பயன்பெறுவார்கள்.

நண்பர்களே, இந்தியா எப்படி மாறி வருகிறது, கனவுகள் எப்படி நனவாகும் என்பதற்கு இந்திய ரயில்வே ஒரு உதாரணம். 6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய ரயில்வே சேவையை பயன்படுத்தியவர்கள், இந்திய ரயில்வேயை சபித்தார்கள். நிலைமை மாறும் என்ற நம்பிக்கையை மக்கள் கைவிட்டனர். ஆனால், நாடு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு உண்மையாக அணிதிரளும்போது, முன்னேற்றம் வரும், மாற்றம் நிகழும், இதை கடந்த சில ஆண்டுகளில் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

நாட்டின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற, முதல் அரசு-தனியார் கூட்டு முறை அடிப்படையிலான ரயில் நிலையம், அதாவது ராணி கமலாபதி ரயில் நிலையம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விமான நிலையத்தில் இருந்த வசதிகள் இப்போது ரயில் நிலையத்திலும் கிடைக்கின்றன.

சகோதர, சகோதரிகளே, இன்றைய இந்தியா, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சாதனை அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், திட்டங்கள் தாமதமாகாமல் இருப்பதையும், எந்தத் தடையும் இல்லை என்பதையும் உறுதி செய்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கதிசக்தி தேசிய பெருந்திட்டம், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற நாட்டிற்கு உதவும். ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் கூட திட்டமிடல் கட்டத்தில் இருந்து களத்தில் உருவெடுப்பதற்கு பல ஆண்டுகள் எடுத்த காலம் இருந்தது. ஆனால் இன்று இந்திய புதிய திட்டங்களைத் திட்டமிடுவதில் ரயில்வே அவசரம் காட்டுகிறது, அதைவிட முக்கியமாக, அவற்றை சரியான நேரத்தில் முடிக்கிறது.

நண்பர்களே, இந்திய ரயில்வே துறை தொலைதூரங்களை இணைக்கும் ஒரு தொடர்பு மட்டுமல்ல, நாட்டின் கலாச்சாரம், நாட்டின் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தொடர்பாகவும் மாறி வருகிறது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக, இந்திய ரயில்வேயின் இந்தத் திறன் இவ்வளவு பெரிய அளவில் ஆராயப்படுகிறது. முன்பெல்லாம், ரயில்வே சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்டாலும், அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற அளவில் இருந்தது. முதன்முறையாக, சாமானியர்களுக்கு நியாயமான விலையில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரையின் ஆன்மீக அனுபவம் வழங்கப்படுகிறது. ராமாயண சர்க்யூட் ரயில் அத்தகைய ஒரு புதுமையான முயற்சியாகும்.

மாற்றத்தின் சவாலை ஏற்று செயல்படுத்தும் ரயில்வேக்கு எனது பாராட்டுக்கள். நவீன ரயில்நிலையம் மற்றும் பல புதிய ரயில் சேவைகள் ஆகியவற்றுக்கு மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். புதிய உத்வேகத்துடன் இந்த மாற்றத்துக்கு உழைத்த ரயில்வே குழுவுக்கு பாராட்டுக்கள். நன்றி.

 

********

 

 



(Release ID: 1773504) Visitor Counter : 137