பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசம், மகோபாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

“கடந்த 7 ஆண்டுகளில், தில்லியில் மூடிய அறைகளுக்குள் இருந்து வெளியே வந்து எவ்வாறு நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் அரசு செயல்பட்டது என்பதை மகோபா கண்டுள்ளது’’

‘’ விவசாயிகளை எப்போதும் பிரச்சினைகளுக்குள் வைத்திருப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை. அவர்கள் பிரச்சினையில் அரசியலை செய்கின்றனர், நாங்கள் தேசிய தீர்வுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம்’’

‘’ முதல்முறையாக, புந்தேல்காண்ட் மக்கள் அதன் வளர்ச்சிக்குப் பாடுபடும் அரசைக் கண்டு வருகிறது. முந்தைய அரசுகள் உத்தரப்பிரதேசத்தை கொள்ளையடிப்பதில் களைப்படையவில்லை, உழைப்பதில் நாங்கள் களைப்படைய மாட்டோம்’’

‘’ பரம்பரை ஆட்சிகள் விவசாயிகளை பற்றாக்குறையில் மட்டுமே வைத்திருந்தன. விவசாயிகளின் பெயரில் அவர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர், ஆனால், ஒரு காசு கூட விவசாயிகளைச் சென்றடையவில்லை’’

‘’ கர்மயோகிகளின் இரட்டை எஞ்சின் அரசு புந்தேல்காண்டின் முன்னேற்றத்துக்கு இடையறாது பாடுபட்டு வருகிறது’’

Posted On: 19 NOV 2021 4:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் மகோபாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள், இந்தப் பிராந்தியத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையை அகற்றுவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான நிம்மதியைக் கொண்டு வரும். அர்ஜூன் சகாயக் திட்டம், ரட்டவுலி அணை, பாவனி அணை திட்டங்கள், மஜ்கான்-சில்லி தெளிப்பான் திட்டம் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.3250 கோடிக்கும் அதிகமாகும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், மகோபா, ஹமீர்பூர், பண்டா, லலித்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 65000 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இதனால், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்துக்கு குடிநீரையும் வழங்கும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடிமை சகாப்தத்தின் போது, இந்தியாவுக்கு விழிப்பேற்படுத்திய குரு நானக் தேவின் பிரகாஷ் புரப்-பை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் தீரமிக்க மங்கை, புந்தேல்காண்டின் பெருமை , ராணி லட்சுமி பாயின் பிறந்த நாள் இன்று என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

 கடந்த 7 ஆண்டுகளில், தில்லியில் மூடிய அறைகளுக்குள் இருந்து வெளியே வந்து எவ்வாறு நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் அரசு செயல்பட்டது என்பதை மகோபா கண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ‘’ நாட்டின் ஏழைத் தாய்மார்கள்-சகோதரிகள்-புதல்விகளின் வாழ்க்கையில், பெரிய மற்றும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள இத்தகையத் திட்டங்கள் மற்றும் முடிவுகளை இந்தப் பூமி கண்டுள்ளது’’ என்று பிரதமர் கூறினார். முத்தலாக் என்னும் கசப்பிலிருந்து இஸ்லாமியப் பெண்களை விடுவிப்போம் என்று மகோபாவில் தாம் வெளியிட்ட வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதையும், இங்கு உஜ்வாலா 2.0 திட்டம் தொடங்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

இந்தப் பகுதி தண்ணீர் பிரச்சினைகளின் இருப்பிடமாக மாறி, புலப்பெயர்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். நீர் மேலாண்மையில் இப்பகுதி சிறந்து விளங்கிய வரலாற்றை  அவர் நினைவு கூர்ந்தார். முந்தைய அரசுகளின் காலத்தில் படிப்படியாக இந்தப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு, ஊழல் நிர்வாகத்தால் சீர்கேடு அடைந்தது. ‘’ இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை மணமுடிக்க மக்கள் தயங்கியதையடுத்து, நிலைமை கவனத்துக்கு வந்தது. தற்போது உபரி நீரால், பெண்கள் திருமண வாழ்த்துகளைப் பெறும் நிலை வந்துள்ளது. மகோபா மக்கள், புந்தேல் காண்ட் மக்கள் இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்துள்ளனர்’’ என்று பிரதமர் தெரிவித்தார்

புந்தேல்காண்டைக் கொள்ளையடித்ததன் மூலம் தங்கள் குடும்பங்களுக்கு முந்தைய அரசு நன்மை செய்து கொண்டதாகப் பிரதமர் கூறினார். ‘’ உங்கள் குடும்பங்களின் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை’’ என்று பிரதமர் கூறினார். பல பத்தாண்டுகளாக, புந்தேல்காண்ட் மக்கள், தங்களைக் கொள்ளையடிக்கும் அரசுகளைத்தான் நீண்டகாலமாக கண்டு வந்துள்ளதாக கூறிய பிரதமர், முதல்முறையாக புந்தேல்காண்ட் மக்கள், இப்பகுதியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அரசைக் கண்டு வருகின்றனர் என்றார். ‘’ முந்தைய அரசுகள் உத்தரப் பிரதேசத்தை கொள்ளையடிப்பதில் களைப்படையவில்லை, உழைப்பதில் நாங்கள் களைப்படைய மாட்டோம்’’ என்றார் அவர். இந்த மாநிலத்தின் மாஃபியா, புல்டோசரை எதிர்கொண்ட போது, பலர் கதறினர்ஆனால், இந்தக் கூக்குரல்களால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணி நிற்காது என்று அவர் தெரிவித்தார்.

 விவசாயிகளை எப்போதும் பிரச்சினைகளுக்குள் வைத்திருப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை. அவர்கள் பிரச்சினை அரசியலை செய்கின்றனர், நாங்கள் தேசிய தீர்வு கொள்கையைப் பின்பற்றுகிறோம். அனைவருடனும் கலந்தாலோசித்து, கென்-பெட்வா இணைப்புத் தீர்வும் எங்களது அரசால் காணப்பட்டது.

பரம்பரை ஆட்சிகள் விவசாயிகளை பற்றாக்குறையில் மட்டுமே வைத்திருந்ததாகப் பிரதமர் தெரிவித்தார். ‘’ விவசாயிகளின் பெயரில் அவர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர், ஆனால், ஒரு காசு கூட விவசாயிகளைச் சென்றடையவில்லை. ஆனால், பிஎம் கிசான் சம்மான் நிதியிலிருந்து நாங்கள் இதுவரை ரூ.1,62,000 கோடியை விவசாயிகளின் வங்கி கணக்குளுக்கு நேரடியாக மாற்றியுள்ளோம் ’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

புந்தேல்காண்டில் இருந்து புலம் பெயர்வதைத் தடுத்து, இந்தப் பிராந்தியத்தை வேலை வாய்ப்பில் தன்னிறைவுப் பெற்றதாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். புந்தேல்காண்ட் விரைவுச்சாலை, .பி பாதுகாப்பு தொழில்வழித்தடம் ஆகியவை இதற்கு பெரிய எடுத்துக்காட்டாகும்.

இந்தப்பிராந்தியத்தின் செழுமையான கலாச்சாரம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கர்மயோகிகளின்  ‘இரட்டை எஞ்சின் அரசின்கீழ், இப்பகுதியின் முன்னேற்றத்துக்கான தமது உறுதிப்பாட்டை தெரிவித்தார்.

****



(Release ID: 1773308) Visitor Counter : 207