பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிட்னி பேச்சுவார்த்தையில் முக்கிய உரை நிகழ்த்திய பிரதமர் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சி குறித்து பேசினார்


இந்தியாவில் இடம்பெற்றிருக்கும் ஐந்து முக்கிய மாற்றங்களைப் பட்டியலிட்டார்

“ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை வெளிப்படைத்தன்மையாகும், அதே சமயம் சுயநலம் கொண்ட ஒரு சிலர் இந்த வெளிப்படைத் தன்மையை தவறாக பயன்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.”

“இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி என்பது எங்களின் ஜனநாயகம், எங்களின் மக்கள் தொகை, எங்களின் பொருளாதார நிலை ஆகியவற்றில் வேரூன்றி இருக்கிறது.”

“தரவுகளை மக்களுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம். தனிநபர் உரிமைகளுக்கு வலுவான உத்தரவாதங்களுடன் ஜனநாயக ரீதியான கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியா ஒப்பில்லாத அனுபவத்தை பெற்றிருக்கிறது.”

“இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியங்கள் பழமையானவை; அதன் நவீன அமைப்புகள் வலுவானவை. உலகம் ஒரு குடும்பம் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.”

தேசிய உரிமைகளை அங்கீகரிப்பதற்கு இணைந்து பணியாற்றுவதற்கும் அதே சமயம் வர்த்தகம், முதலீடு மற்றும் விரிவான பொதுநலனை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்டத்தை வழங்கினார்.

“கிரிப்டோ கரன்சி குறித்து அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் நமது இளைஞ

Posted On: 18 NOV 2021 9:29AM by PIB Chennai

சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முக்கிய உரை நிகழ்த்தினார். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சியின் மையக்கருத்து குறித்து திரு மோடி பேசினார். ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசனின் அறிமுக உரைக்கு முன்னதாக இந்த உரை இடம்பெற்றது.

இந்திய – பசிபிக் பிராந்தியம் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் இந்தியாவின் மையப் பங்களிப்பிற்கான அங்கீகாரம் பற்றி பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். டிஜிட்டல் யுகத்தின் பயன்கள் பற்றி கூறிய பிரதமர், கடல் படுகை முதல் சைபர் மற்றும் விண்வெளி வரை பல வகையான அச்சுறுத்தும் முரண்பாடுகளை உருவாக்கும் புதிய அபாயங்களையும், புதிய வடிவங்களையும் கூட நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்றார்.  “ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை வெளிப்படைத்தன்மையாகும், அதே சமயம் சுயநலம் கொண்ட ஒரு சிலர் இந்த வெளிப்படைத் தன்மையை தவறாக பயன்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.” என்று பிரதமர் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் டிஜிட்டலில் தலைவராக உள்ள இந்தியா   பகிரப்பட்ட வளம் மற்றும் பாதுகாப்பில் கூட்டாளிகளுடன் பணியாற்ற தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார். “இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி என்பது எங்களின் ஜனநாயகம், எங்களின் மக்கள் தொகை, எங்களின் பொருளாதார நிலை ஆகியவற்றில் வேரூன்றி இருக்கிறது.  கடந்தகால சவால்களை, எதிர்கால பாய்ச்சலுக்கான வாய்ப்பாக நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.”

இந்தியாவில் இடம்பெற்றிருக்கும் ஐந்து முக்கியமான மாற்றங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். ஒன்று, உலகின் மிக விரிவான மக்கள் தகவல் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கிராமங்கள் விரைவில் அகண்ட அலைவரிசையுடன் இணைக்கப்படவுள்ளன. யுபிஐ எனும் உலகின் மிகவும் திறன் வாய்ந்த பணப் பரிவர்த்தனை கட்டமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு, நிர்வாகம், அனைவரையும் உட்படுத்துதல், அதிகாரமளித்தல், போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துதல், பயன்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குதல் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மூன்று, உலகின் மூன்றாவது பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்துவரும் புதிய தொழில்கள் சூழலை இந்தியா கொண்டிருக்கிறது. நான்கு, இந்தியாவின் தொழில்துறை மற்றும் சேவைகள் துறை மட்டுமின்றி வேளாண்துறையும் கூட மிகப்பெரும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. ஐந்து,  எதிர்காலத்திற்கான இந்தியாவை உருவாக்க மிகப்பெரிய முயற்சி உள்ளது. “5ஜி, 6ஜி போன்று தொலைத்தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்த நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு மற்றும் கருவிகள் வழி கற்றல், குறிப்பாக மனிதத்தை மையப்படுத்திய நெறிமுறைகள் கொண்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.  கணினி மூலம் அனைத்துவகை சேவைகள் வழங்குதல் மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங்கில் வலுவான திறன்களை நாங்கள் மேம்படுத்துகிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் வலுவான மற்றும் டிஜிட்டல் இறையாண்மை பற்றி பேசிய பிரதமர் “கணினி வன்பொருள் தயாரிப்பில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். செமி கண்டெக்டர்களின் முக்கிய உற்பத்தியாளராக மாறுவதற்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துவருகிறோம். மின்னணு மற்றும் தொலைத்தகவல் தொடர்பு துறையில் எங்களின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் ஏற்கெனவே உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களைக் கவர்ந்து இந்தியாவில் அவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது” என்றார். தரவு பாதுகாப்பு, தனி நபர் உரிமை மற்றும் பந்தோபஸ்தில் இந்தியாவின் உறுதியையும் அவர் வலியுறுத்தினார் “அதே சமயம், தரவுகளை மக்களுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக நாங்கள் பயன்படுத்துகிறோம். தனிநபர் உரிமைகளின் வலுவான உத்தரவாதங்களோடு ஜனநாயக கட்டமைப்பில் ஒப்பில்லாத அனுபவத்தை இந்தியா பெற்றிருக்கிறது” என்று பிரதமர் கூறினார்.

ஒய்2கே பிரச்சனையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கோவின் இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தும் மென்பொருளாக உலகிற்கு வழங்கியிருப்பதை இந்தியாவின் மாண்புகள் மற்றும் தொலை நோக்கிற்கான உதாரணங்களாகப் பிரதமர் எடுத்துரைத்தார். “இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியங்கள் பழமையானவை; அதன் நவீன அமைப்புகள் வலுவானவை.  உலகம் ஒரு குடும்பம் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

தொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியாவின் விரிவான அனுபவம் பொது நன்மைக்கான கொள்கை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக அதிகாரமளிப்பு ஆகியவை வளரும் உலகிற்கு மாபெரும் உதவி செய்யமுடியும் என்று திரு மோடி கூறினார். “நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் அதிகாரமளிக்க இந்த நூற்றாண்டின் வாய்ப்புகளுக்கு அவர்களை தயார் படுத்தவும் நாம் ஒருங்கிணைந்து செயலாக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து முதலீடு செய்வதற்கு; நம்பிக்கையான உற்பத்தி தளத்தையும், வழங்கல் தொடரையும் உருவாக்குவதற்கு; சைபர் பாதுகாப்பு, முக்கியமான தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு ஆகியவற்றில் நுண்ணறிவு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு; மக்கள் கருத்துக்கள் திரிக்கப்படுவதை தடுப்பதற்கு; நமது ஜனநாயக மாண்புகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மற்றும் நிர்வாக தரங்களையும் விதிகளையும் உருவாக்குவதற்கு;  தரவுகள் நிர்வாகத்திற்கும், எல்லை கடந்து செல்லும் தரவுகளுக்கான பாதுகாப்பிற்கும், தரங்களையும் விதிமுறைகளையும் உருவாக்குவதற்கு ஒன்றுபட்டு பணியாற்றுவதற்கான ஜனநாயக வழிமுறைகளை வழங்கிய திரு மோடி ஒத்துழைப்பு கட்டமப்புக்கு அழைப்புவிடுத்தார். வளர்ந்துவரும் கட்டமைப்பு “தேசிய உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும், அதே சமயம் வர்த்தகம், முதலீடு, பரவலான மக்கள் நலன் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி உதாரணத்தை எடுத்துரைத்த அவர், “இந்த விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இது நமது இளைஞர்களை பாழாக்குவோரின் தவறான கைகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்” என்றும் கூறினார்.

****


(Release ID: 1772950) Visitor Counter : 335