சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, பாதி தடுப்பூசி போட்டவர்களை விட முதல் முறையாக அதிகரித்துள்ளது: டாக்டர் மன்சுக் மாண்டவியா
Posted On:
17 NOV 2021 1:42PM by PIB Chennai
நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகுதியுள்ள நபர்களை விட முதன் முறையாக அதிகரித்துள்ளது. ‘ஜன் – பாகிதாரி’ என்னும் பிரதமரின் தொலைநோக்கு, “முழுமையான அரசு அணுகுமுறை”, அரசு மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஹர் கர் தஸ்தக்’ இயக்கம் ஆகியவற்றின் காரணமாகவே இந்தச் சாதனை சாத்தியமாகி உள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் 113.68 கோடிக்கும் அதிகமான (1,13,68,79,685) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனை 1,16,73,459 அமர்வுகள் மூலம் எட்டப்பட்டுள்ளது. இவற்றில் 75,57,24,081 டோஸ் தடுப்பூசிகள் முதல் தவணையாகவும், 38,11,55,604 டோஸ்கள் இரண்டாவது தவணையாகவும் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை (38,11,55,604) ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட (37,45,68,477) விட அதிகரித்துள்ளது.
இந்த சாதனைக்கான நாட்டின் கூட்டு முயற்சிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து தகுதியான மக்களுக்கும் அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நாம் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.
மாதம் முழுவதும் நடைபெறும் ‘ஹர் கர் தஸ்தக்’ (ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பூசி) இயக்கத்தின் முடிவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021 ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2021 அக்டோபர் 21-ந் தேதி 100 கோடி டோஸ்களை இயக்கம் கடந்தது. அதனையடுத்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ‘ஹர் கர் தஸ்தக்’ இயக்கத்திற்கு நவம்பர் 3-ந் தேதி அழைப்பு விடுத்தார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களை ஊக்குவித்து வீடு வீடாக சென்று அதனை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பது அதன் பொருளாகும்.
நாட்டில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இல்லையென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்களை வலியுறுத்தியுள்ள அவர், இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளுமாறும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரையும், சமுதாயத்தினரையும் ஊக்கப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
•••••••
(Release ID: 1772705)
Visitor Counter : 317