பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யான் சஹ சுதந்திரதா சேனானி சங்க்ராலயத்தை நவம்பர் 15-ம்தேதி ராஞ்சியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்


பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15 ஜன்ஜாதிய கவுரவ் தினமான கொண்டாடப்படும்

பழங்குடியின கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் அருங்காட்சியகம் முக்கிய பங்கு வகிக்கும்

அருங்காட்சியகத்தில் பகவான் பிர்சா முண்டாவின் 25 அடி உயர சிலை அமையும்
இதர பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பும் சிறப்பிடம் பெறும்

Posted On: 14 NOV 2021 4:16PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினம் ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஞ்சியில் நவம்பர் 15-ம்தேதி காலை 9.45 மணிக்கு பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யான் சஹ சுதந்திரதா சேனானி சங்க்ராலயத்தை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

 

பிரதமர் எப்போதும் பழங்குடியின சமுதாயத்தினர் ஆற்றியுள்ள மதிப்புமிகு பங்களிப்பை, குறிப்பாக விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் செய்த தியாகங்களை வலியுறுத்திக் கூறி வந்துள்ளார். 2016-ம் ஆண்டு அவரது சுதந்திர தின உரையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விடுதலைப்போர் வீரர்களின் பங்கைச் சிலாகித்த பிரதமர், நாட்டுக்காக அவர்கள் புரிந்த தியாகத்தை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், தீரமிக்க பழங்குடியின வீரர்களின் நினைவாக அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். பழங்குடியின நல அமைச்சகம் இதுவரை 10 பழங்குடியின விடுதலைப் போராட்ட அருங்காட்சியகங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் பகுதிகளைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவை இந்த அருங்காட்சியகங்கள் பறைசாற்றும்.

 

பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யான் சஹ சுதந்திரதா சேனானி சங்க்ராலயம் ஜார்க்கண்ட் மாநில அரசின் ஒத்துழைப்புடன், பகவான் பிர்சா முண்டா உயிர்த் தியாகம் செய்த, ராஞ்சியின் பழைய மத்திய சிறையில் அமைக்கப்படும். நாட்டுக்காகவும், பழங்குடியினருக்காவும் அவர் புரிந்த தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இது அமையும். பழங்குடியின கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் அருங்காட்சியகம் முக்கிய பங்கு வகிக்கும். பழங்குடியினர் தங்களது காடுகள், நில உரிமைகள், தங்களது காலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க நடத்திய போராட்டம், நாட்டின் கட்டமைப்புக்கு முக்கியமான அவர்களது தீரம் மற்றும் தியாகத்தை அது  பறைசாற்றும்.

பகவான் பிர்சா முண்டாவுடன், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இதர பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களான ஷாகித் புத்து பகத், சித்து-கன்ஹூ, நிலாம்பர்-பிதாம்பர், திவா-கிசுன், தெலங்கா காடியா, கயா முண்டா, ஜத்ரா பகத், போடோ எச், பகீரத் மஞ்சி, கங்கா நாராயண் சிங் ஆகியோரைப் பற்றியும் அருங்காட்சியகம் விளக்கும். பகவான் பிர்சா முண்டாவின் 25 அடி உயரச் சிலையும், அப்பகுதியைச் சேர்ந்த இதர விடுதலைப் போராட்ட வீரர்களின் 9 அடி உயரச் சிலைகளும் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படும்.

ஸ்மிருதி உதயன் 25 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இசை நீரூற்று, உணவு விடுதி, குழந்தைகள் பூங்கா, குளம், தோட்டம் மற்றும் இதர கேளிக்கை வசதிகள் இடம் பெறும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியின நல அமைச்சரும் கலந்து கொள்வார்.

 

***


(Release ID: 1771723) Visitor Counter : 282