மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பகவான் பிர்சா முண்டா பிறந்த நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஒரு வாரம் கால கொண்டாட்டத்துக்கு திட்டம்

Posted On: 10 NOV 2021 3:40PM by PIB Chennai

தீரமான பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறவும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும் நவம்பர் 15ம் தேதியை, ஜன்ஜாதிய கௌரவ் தினமாக அறிவிக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தியாவின் சுதந்திர போராட்டம் சந்தால்கர்கள், தமார்கள், கோல் இனத்தவர், பில், காசி இனத்தவர் மற்றும் மிசோ இனத்தவர் உட்பட இன்னும் பல பழங்குடியின சமுதாயத்தினரால் வலுப்படுத்தப்பட்டது.  இந்த பழங்குடி இனத்தவர்கள் நடத்திய புரட்சிகர இயக்கங்கள் மற்றும்  போராட்டங்கள் அவர்களின் மகத்தான தைரியம் மற்றும் உன்னத தியாகத்தால் குறிக்கப்பட்டன.  ஆங்கில ஆட்சிக்கு எதிரான, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின  இயக்கங்கள், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டு நாடு முழுவதும் இந்தியர்களை ஊக்குவித்தன.  ஆனால், அந்த பழங்குடியின நாயகர்கள் பற்றி, பொது மக்கள் பலருக்கு தெரியாது.  மாண்புமிகு பிரதமரின் 2016ம் ஆண்டு சுதந்திர தின உரையை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஜன்ஜாதிய கௌரவ் தினம் அறிவிக்கப்பட்ட தேதி, திரு பிர்சா முண்டாவின் பிறந்த தினம். அவர் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களால் பகவான் என அழைக்கப்பட்டார்.  ஆங்கில காலனி முறையின் சுரண்டலுக்கு எதிராக பிர்சா முண்டா தைரியமாக போராடினார் மற்றும் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.  இந்த அறிவிப்பு, பழங்குடியின சமுதாயத்தின் பெருமையான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அங்கீகரிக்கிறது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மற்றும் பழங்குடியின கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும்.   ராஞ்சியில் உள்ள பழங்குடியினர் சுதந்திர அருங்காட்சியகம் அமைக்கும் இடத்தில்தான் பிர்சா முண்டா இறந்தார். இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைப்பார்.

பழங்குடியின மக்களில் 75 ஆண்டு வரலாறை நினைவு கூறும் வகையில்  இந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒருவார கால கொண்டாட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை  மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள், பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சார பாரம்பரியம், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை  வெளிப்படுத்தும்.

****


(Release ID: 1770594) Visitor Counter : 1041