நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது மத்திய அரசு


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நாளை முதல் முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கப்படும்

Posted On: 03 NOV 2021 8:18PM by PIB Chennai

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் படி நாளை முதல் பெட்ரோல், டீசல் விலைக் குறையும். 

டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.

சமீப மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, சமீப வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உள்நாட்டில் அதிகரித்து வருகின்றன. நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மந்தநிலைக்குப் பிறகு இந்திய மக்களின் உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும்- உற்பத்தி, சேவை அல்லது விவசாயம்- குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.

பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியைக் கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்றைய முடிவு ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி)  மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769306

********


(Release ID: 1769347) Visitor Counter : 395