பிரதமர் அலுவலகம்
பிரதமர் மோடி தலைமையில் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு
Posted On:
28 OCT 2021 7:09PM by PIB Chennai
ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு. நரேந்திர மோடி 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்றார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த உச்சிமாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
2022-ஆம் ஆண்டு, ஆசியான்–இந்தியா நாடுகளிடையேயான உறவுகளின் 30-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இதனால் இந்த ஆண்டை இந்தியா-ஆசியான் நட்பு ஆண்டாக ஆசியான் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கு ஆசியான் கூட்டமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பை பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கும் அக்கூட்டமைப்பு உதவியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையை உண்டாக்குவதற்கான இந்தியா-ஆசியான் கூட்டு அறிக்கையை பிரதமர் மோடியும் ஆசியான் தலைவர்களும் வரவேற்றனர்.
கொவிட்-19 எதிர்கொள்வதற்கான பிராந்தியத்தில் இந்தியா ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும் ஆசியான் முயற்சிகளுக்கு இந்தியா அளித்த ஆதரவு குறித்தும் பிரதமர் கூறினார். மியான்மருக்கான ஆசியானின் மனிதாபிமான திட்டத்திற்கு, 200,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. அதேபோல், ஆசியான் கொவிட் -19 நிவாரண நிதிக்கு இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.
நேரடியான முறை, டிஜிட்டல் முறை மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா-ஆசியான் பங்கு குறித்து தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியா-ஆசியான் கலாச்சார இணைப்பை மேலும் வலுப்படுத்த, ஆசியான் கலாச்சார பாரம்பரியப் பட்டியலை நிறுவுவதற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் அறிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீட்டில், கொவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு விநியோகச் சங்கிலிகளின் மீள்தன்மை மற்றும் அதனை பல்வகைப்படுத்தலின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி கோடிட்டுக்காட்டினார். இது தொடர்பாக, இந்தியா-ஆசியான் தடையற்ற வர்த்தகப் பகுதியைச் சீரமைக்க வேண்டிய அவசியத்தை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
பிராந்தியத்தில் இந்தியா அளித்துள்ள பங்கு, குறிப்பாக தற்போதைய கொவிட்-19 தொற்று காலத்தில் தடுப்பூசி விநியோகம் மூலம் இந்தியா அளித்துள்ள பங்கை ஆசியான் தலைவர்கள் பாராட்டினர். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் பங்களிப்பு இந்தியாவின் ஆதரவையும் தலைவர்கள் வரவேற்றனர். அதேபோல், கூட்டறிக்கை மூலம் இந்த பிராந்தியத்தில் இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பை அதிக அளவில் எதிர்பார்ப்பதாக கூறினார்.
தென் சீனக் கடல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான நலன்கள் மற்றும் அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. சர்வதேச சட்டத்தை, குறிப்பாக UNCLOS எனப்படும் கடல் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை கடைபிடிப்பது உட்பட, பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் விவாதித்தனர். தென் சீனக் கடலில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு பேணுதல்-ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், மற்றும் வழிசெலுத்தல் மற்றும் அதிக விமானப் பயணங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆசியான் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவானது ஆழமான, வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. 18வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இந்த உறவின் பல்வேறு அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது
***
(Release ID: 1767448)
Visitor Counter : 287
Read this release in:
Hindi
,
Marathi
,
Gujarati
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu