பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 25 அன்று உத்தரப்பிரதசத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைக்கவுள்ளார்


தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் சுகாதார கவனிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்
நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொது சுகாதாரக் கட்டமைப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டு இடைவெளிகளை நிரப்புவது தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்

5 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு சேவைகள் கிடைக்கும்

அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக்கூடங்கள் அமைக்கப்படும்

சுகாதாரத்திற்கான தேசிய கல்விக்கழகம், நுண்கிருமி ஆய்வுக்கான 4 புதிய தேசிய கல்விக்கழகங்கள் அமைக்கப்படவுள்ளன

தகவல் தொழில்நுட்பம் மூலம் நோய் கண்காணிப்பு நடைமுறை உருவாக்கப்படவுள்ளது
உத்தரப்பிரதேசத்தில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் தொடங்கிவைப்பார்
வாரணாசிக்கு ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைப்பார்

Posted On: 24 OCT 2021 2:06PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2021, அக்டோபர் 25 அன்று உத்தரபிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். காலை சுமார் 10 மணி அளவில் சித்தார்த் நகரிலிருந்து  உத்தரப்பிரதேசத்தின் ஒன்பது மருத்துவக்  கல்லூரிகளைப் பிரதமர் திறந்துவைப்பார். இதைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 1.15 மணிக்கு வாரணாசியில் பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தைப் பிரதமர் தொடங்கிவைப்பார். வாரணாசிக்கு ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.

 

தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் (பிஎம்எஎஸ்பிஒய்) என்பது நாடு முழுவதும் சுகாதார கவனிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இது தேசிய சுகாதார இயக்கத்திற்குக் கூடுதல் ஒன்றாக இருக்கும்.

 

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பொது சுகாதாரக் கட்டமைப்பில் குறிப்பாக தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் ஆரம்ப சுகாதாரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டு இடைவெளிகளை  நிரப்புவது தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தின் நோக்கமாகும். அதிக கவனம் பெரும் 10 மாநிலங்களின் 17,788 ஊரக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு இது உதவியாக இருக்கும். மேலும் 11,024 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

 

சிறப்பு தீவிர சிகிச்சைக்கான மருத்துவமனை பிரிவுகள் மூலம் 5 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு சேவைகள் கிடைக்கும். எஞ்சியுள்ள மாவட்டங்களில் பரிந்துரை சேவைகளின் மூலம் செயல்படுத்தப்படும்.

 

நாடு முழுவதும் உள்ள பரிசோதனைக் கூடங்களின் வலைப்பின்னல் மூலம் பொது சுகாதார கவனிப்பு நடைமுறையில் நோய் கண்டறிதல் சேவைகள் முழு அளவில் மக்களுக்குக் கிடைக்கும். அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக்கூடங்கள் அமைக்கப்படும்.

 

பிஎம்எஎஸ்பிஒய் - கீழ், சுகாதாரத்திற்கான ஒரு தேசிய கல்விக்கழகம்நுண்கிருமி ஆய்வுக்கான 4 புதிய தேசிய கல்விக்கழகங்கள், உலக சுகாதார அமைப்புக்கான தென்கிழக்கு ஆசிய பிராந்திய மண்டல ஆராய்ச்சி அமைப்பு, உயிரி பாதுகாப்பு மூன்றாம் நிலையில் 9 பரிசோதனைக்  கூடங்கள், நோய்  கட்டுப்பாட்டுக்கான 5   புதிய மண்டல தேசிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

 

பெருநகரப்பகுதிகளில் வட்டாரம், மாவட்டம், மண்டலம், மற்றும் தேசிய நிலைகளில் கண்காணிப்புப் பரிசோதனைக் கூடங்கள் வலைப்பின்னலை தகவல் தொழில்நுட்பம் மூலம் நோய் கண்காணிப்பு நடைமுறையை  உருவாக்குவது பிஎம்எஎஸ்பிஒய்-யின் இலக்குகளாகும்.  அனைத்து பொது சுகாதார கூடங்களை இணைப்பதற்கு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஒருங்கிணைந்த சுகாதார தகவல் இணையப்பக்கம் விரிவாக்கப்படும்.

 

  

தீவிரமாக நோய் கண்டறிதல், ஆய்வு செய்தல், தடுத்தல் மற்றும் பொது சுகாதார அவசர நிலைகளையும் நோய் பரவலையும் முறியடித்தல் ஆகியவற்றிற்காக 17 புதிய பொது சுகாதார அலகுகள் மற்றும் தற்போதுள்ள 33 பொது சுகாதார அலகுகளைத்  தொடங்கும் நிலையிலேயே வலுப்படுத்துதல் ஆகியவையும் பிஎம்எஎஸ்பிஒய்-யின் நோக்கங்கள் ஆகும். பொது சுகாதார அவசர தகவல் கேட்பு எதற்கும் பதிலளிக்க வசதியாக முன்கள சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

 

சித்தார்த் நகர், எட்டாவா, ஹர்தோய், பதேபூர், தியோரிய, காஜிப்பூர், மிர்சாபூர், ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. "மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக்கல்லூரிகள் நிறுவுதல்" என்ற மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின்கீழ் எட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும், ஜாம்பூரில் மாநில அரசின் சொந்த நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்படும்  ஒரு மருத்துவக்கல்லுரிக்கும்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

       

வசதிகுறைந்த, பின்தங்கிய மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின்கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதில் தற்போதுள்ள புவியியல் ரீதியிலான சமச்சீரின்மையை  சரிசெய்தல்மாவட்ட மருத்துவமனைகளில் தற்போதுள்ள அடிப்படை கட்டமைப்பை நன்கு பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூன்று கட்டங்களில் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 63 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேசத்தின் ஆளுநர், முதலமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

***


(Release ID: 1766129) Visitor Counter : 322