குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மக்களுடன் அரசுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதே அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகளின் முக்கிய பங்களிப்பாக இருக்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர்

Posted On: 19 OCT 2021 4:23PM by PIB Chennai

நல்லாட்சி நடத்துவதற்கு வலுவான மக்கள் தொடர்பின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள  குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கய்யா நாயுடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை  உள்ளூர் மொழிகளில் குறித்த காலத்திற்குள் கொண்டு சேர்ப்பதன் மூலம், மக்களுக்கு அதிகாரமளிக்க பாடுபடவேண்டும் என அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்திய தகவல் பணி (IIS) 2020 அணியைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் ஐதராபாதில் உள்ள தமது இல்லத்தில் இன்று (19.10.2021) கலந்துரையாடிய குடியரசு துணைத்தலைவர், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியை அகற்றுவதில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.

அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து, மக்களுக்கு எளிமையான மற்றும் தெளிவான மொழியில் எடுத்துக் கூறினால், அவர்கள் அதன் பலன்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளை மேம்பட்ட வகையில் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் தகவல் தொடர்பு சேவையில், உறுதி செய்யப்பட்ட தகவல்களை வெளியிடுவது அவசியம் என்று சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதில் தகவல் பணி அதிகாரிகள்,  கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  சக்தி வாய்ந்த ஆயுதமாக திகழும் ஊடகத்தை, பொறுப்புடன் பயன்படுத்தி,  விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உயர்வாக சிந்தித்து பெரிய அளவில் கற்பனை செய்து கடினமாக உழைப்பதுடன் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பதே தமது தாரக மந்திரம் என்றும் திரு வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.



(Release ID: 1764933) Visitor Counter : 235