பிரதமர் அலுவலகம்

சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் அக்டோபர் 20 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 19 OCT 2021 12:38PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 20 அக்டோபர் 2021 மாலை 6 மணி அளவில், சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.   2016-ல் தொடங்கப்பட்ட இது போன்ற வருடாந்திர கலந்துரையாடல், தற்போது 6-வது முறையாக நடைபெற உள்ளது, இதில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் துறையில், சர்வதேச அளவில் முன்னோடியாக உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்று விவாதிக்க இருப்பதுடன், இத்துறையில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராய உள்ளனர்.

தூய்மையான வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில்  ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தல், எரிசக்தித் துறையில் தற்சார்பு, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம், நச்சுப்புகை வெளியேற்றக் குறைப்பு போன்றவற்றின் மூலம், தூய்மையான மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி வளங்களைக் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம், உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருள்களை உருவாக்குதல் போன்றவை குறித்து  இந்த கலந்துரையாடலின் போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளது. சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழும் பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இதில்  பங்கேற்று கருத்துப் பரிமாற்றம் செய்ய உள்ளனர். 

மத்திய  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் இந்த கலந்துரையாடலின் போது உடனிருப்பார்.



(Release ID: 1764908) Visitor Counter : 194