பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய பட்டினி அறிக்கை 2021 பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை

Posted On: 15 OCT 2021 5:48PM by PIB Chennai

கன்சர்ன் வோல்ட் வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்பி என்ற நிறுவனங்கள் கடந்த 14ம் தேதி வெளியிட்ட உலகளாவிய பட்டினி அறிக்கை 2021- குறித்து கீழ்கண்ட கருத்துக்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘‘ ஊட்டசத்து குறைவான மக்கள் தொகை விகிதப்படி, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மதிப்பீட்டின் அடிப்படையில் உலகளாவிய பட்டினி அறிக்கை 2021, இந்தியாவின் தர வரிசையை குறைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை அல்லாதது. இதில் சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த அறிக்கையை வெளியிடும் முன், அதை வெளியிட்ட நிறுவனங்கள் அதை சரிபார்ப்பதில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு மேற்கொள்ளும் முறை, அறிவியல் பூர்வமானது அல்ல. 4 கேள்விகள் அடிப்படையில் போன் மூலம் கருத்து கேட்டு இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிட எடை, உயரம் போன்ற அறிவியல் பூர்வமான அளவீடுகள் தேவை. கொவிட் காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட பிரம்மாண்ட முயற்சியை இந்த அறிக்கை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இந்த கருத்து கணிப்பில், பதில் அளித்தவர் அரசிடம் இருந்து உணவு தானிய உதவி பெற்றாரா என ஒரு கேள்வி கூட இல்லை. இந்த கருத்து கணிப்பின் பிரதிநிதித்துவமும் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.

 உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை  பற்றிய உலகளாவிய பட்டினி அறிக்கை 2021 மற்றும் எப்ஏஓ அறிக்கை, பொது தளத்தில் உள்ள கீழ்கண்ட உண்மைகளை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

1. கொவிட்-19க்கு பொருளாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டம் (PMGKAY) , ஆத்ம நிர்பார் பாரத் திட்டங்களை (ANBS) அமல்படுத்தியது.

ii.       பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதம் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

iii.      2020ம் ஆண்டில் 3.22 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்களும், 2021ம் ஆண்டில் 3.28 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்களும், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

iv.      மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 19.4 கோடி குடும்பங்களுக்கு 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

v.       ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் உணவு தானியங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2020ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்களோடு, 0.27 லட்சம் மெட்ரிக் டன்கள் கொண்டைக் கடலையும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

vi.      தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கமான ஒதுக்கீட்டுடன், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள்/ பருப்புகள் / கொண்டைக் கடலை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

vii.     இது தவிர வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் வழங்கிய ரேசன் கார்டு பயனாளிகளுக்கு வழங்க  ஒரு கிலோ கோதுமை மற்றும் அரிசி ரூ.21க்கு உச்சவரம்பு இல்லாமல் மாநிலங்களுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டம் 2021 மே மாதத்துக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

viii.    வேலையில் இடையூறை தவிர்க்க அமைப்பு சார் தொழிலில், 100 தொழிலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் நிறுவனங்களில் ரூ.15,000க்கு கீழ் மாத ஊதியம் பெற்றவர்களுக்கு, அவர்களது பி.எப். கணக்கில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 24 சதவீத மாத ஊதியத்தை மத்திய அரசு செலுத்தியது.  

ix.      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் ஊதியம் கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி ரூ.20 அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக கிடைத்தது. இதன் மூலம் 13.62 கோடி குடும்பங்கள் பயனடைந்தன.

x.       பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ.2,000 கடந்தாண்டு ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது.

xi.      20.4 கோடி ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் ரூ.500 கருணைத் தொகை செலுத்தப்பட்டது.

xii.     பெண்களால் நடத்தப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு உத்திரவாதம் இல்லாத கடன் பெறும் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

xiii.    கொவிட்-19 ஆல் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக 3 கோடி, வயதான விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.1,000 வழங்கப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764191

*****************

 

 


(Release ID: 1764247) Visitor Counter : 408