பிரதமர் அலுவலகம்

இந்திய விண்வெளி சங்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண், பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஆகியோருக்குப் புகழாரம் சூட்டினார்

“இந்தியாவில் இத்தகைய, தீர்மானகரமான அரசு ஒருபோதும் இருந்ததில்லை, இதற்கு விண்வெளித் துறையிலும், விண்வெளித் தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீர்த்திருத்தங்கள் உதாரணமாகும்”

“விண்வெளி சீர்த்திருத்தங்களில் அரசின் அணுகுமுறை 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது”

“விண்வெளித் துறை என்பது 130 கோடி இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான வழியாகும். இந்தியாவைப் பொறுத்தவரை விண்வெளித் துறை என்பதன் பொருள் சாமானிய மக்களுக்கு சிறந்த வரைபடம் தயாரித்தல், உருவப்படுத்துதல், தொடர்பு வசதிகளை உருவாக்குதலாகும்”

“தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தியாகும்”

”பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் கொள்கை தெளிவானது, அரசின் தேவை ஏற்படாத பெரும்பாலான துறைகள் தனியார் துறைகளுக்குத் திறந்துவிடப்படுகின்றன. ஏர் இந்தியா தொடர்பான முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தை

Posted On: 11 OCT 2021 1:00PM by PIB Chennai

இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கூடியிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர்,  பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண், பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஆகிய நாட்டின் இரண்டு மகத்தான முதல்வர்களின் பிறந்தநாள் இன்று என்பதை நினைவுகூர்ந்தார். இந்த இரண்டு மகத்தான ஆளுமைகளும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவுக்குப் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் முயற்சியுடன் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய மாற்றங்களை யதார்த்தமாக மாற்றுவது எவ்வாறு என்பதை இவர்கள் காண்பித்தனர். இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் புகழாரம் சூட்டிய பிரதமர், இவர்களின் வாழ்க்கைத் தத்துவம் இன்றும் கூட நமக்கு ஊக்கமளிக்கிறது என்றார்.

இன்று இருப்பது போல் இந்தியாவில் தீர்மானகரமான அரசு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் கூறினார். இதற்கு விண்வெளித் துறையிலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீர்த்திருத்தங்கள் உதாரணமாகும். இந்திய விண்வெளி சங்கம் (இஸ்பா) அமைவதற்கு பங்களிப்பு செய்த அனைவரையும் அவர் பாராட்டினார்.

விண்வெளி சீர்த்திருத்தங்களில் அரசின் அணுகுமுறை 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். முதலாவது தனியார் துறைக்குப் புதிய கண்டுபிடிப்புக்கான சுதந்திரம். இரண்டாவது ஒரு திறனாளர் என்ற முறையில் அரசின் பங்கு. மூன்று, எதிர்காலத்திற்கு இளைஞர்களைத் தயார் செய்தல். நான்கு, சாமானிய மனிதரின் முன்னேற்றத்திற்கான ஆதாரவளமாக விண்வெளித்துறையை பார்ப்பது. விண்வெளித் துறை என்பது 130 கோடி இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான வழியாகும். இந்தியாவைப் பொறுத்தவரை விண்வெளித் துறை என்பதன் பொருள் சாமானிய மக்களுக்கு சிறந்த வரைபடம் தயாரித்தல், உருவப்படுத்துதல், தொடர்பு வசதிகளை உருவாக்குதலாகும். தொழில் முனைவோருக்கு ஏற்றுமதியிலிருந்து கொண்டு சேர்த்தல் வரை நல்ல வேகம் என்பதும் விண்வெளித் துறையின் பொருளாகும். மீனவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் வருவாய் என்பதற்கும் இயற்கை சீற்றம் குறித்த சிறந்த முன்னறிவிப்புக்கும் இது பயன்படுகிறது.

தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல; அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தியாகும். இந்த உத்தி, இந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களின் திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை மாற்றும். இந்த உத்தி, உலகளாவிய வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும், இந்தியாவில் மனிதவளம் மற்றும் திறமையை உலகளவில் விரிவுபடுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் கொள்கை தெளிவானது, அரசின் தேவை ஏற்படாத பெரும்பாலான துறைகள் தனியார் துறைகளுக்கு திறந்துவிடப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். ஏர் இந்தியா தொடர்பான முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் விண்வெளித் தொழில்நுட்பம் கடைகோடிப் பகுதிக்கும் வசதிகள் வழங்கும், கசிவு இல்லாத, வெளிப்படையான நிர்வாகத்தின் கருவியாக மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழைகளுக்கான வீட்டு வசதி அலகுகள், சாலைகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை செல்பேசி மற்றும் இணையத்தின் மூலம் புவி சார்ந்த நிலைகளை அறிந்து கொள்ளப் பயன்படுத்துவதை அவர் உதாரணமாகத் தெரிவித்தார். செயற்கைக்கோள் படங்களின் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. விண்வெளித் ஃபசல் பீமா திட்டத்தின் உரிமைக் கோரல்களை பைசல் செய்வதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, ‘நேவிக்’ முறை மீனவர்களுக்கு உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேரிடர் மேலாண்மையும் திட்டமிடப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாக தொழில்நுட்பத்தை மாற்றுவது முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உதாரணமாக தெரிவித்த அவர், டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே இந்தியா இன்று முதல் நிலையில் உள்ளது என்று கூறினார். ஏனெனில் ஏழைகளிலும் ஏழையானவர்களுக்குத் தரவுகள் எளிதாகக் கிடைக்கும் சக்தியை நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இளம் தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறைகள் பற்றி பேசிய பிரதமர், அனைத்து நிலைகளிலும் தொழில் துறையையும் புதியன கண்டுபிடிக்கும் இளைஞர்களையும் புதிய தொழில்களையும் அரசு ஊக்கப்படுத்துகிறது என்றார்.

“வலுவான புதிய தொழில்துறை சூழலை உருவாக்க ஒரு தளத்தை அமைக்கும் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. ஒரு தளத்தைக் கொண்ட நடைமுறை அணுகுமுறையைப் என்பதன் பொதுவான கட்டுப்பாட்டு தளங்களை அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாக அரசு உருவாக்குகிறது. மேலும் தொழில்துறைக்கும், தொழில்முனைவோருக்கும் அவற்றை கிடைக்கச் செய்கிறது” என்று இந்தத் தளம் பற்றி அவர் விவரித்தார். வலுவான, நிதி சார்ந்த வலைப்பின்னலின் அடிப்படையாக மாறியுள்ள யுபிஐ தளத்தை உதாரணமாகப் பிரதமர் எடுத்துக்காட்டினார். இது போன்ற தளங்கள் விண்வெளி, புவிசார் துறைகளிலும் பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் பயன்பாட்டிற்கும் ஊக்கப்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இன்று கூடியிருப்போரின் ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தீவிரப் பங்களிபு மூலம் வெகு விரைவில் சிறந்த விண்வெளிக் கொள்கையும், தொலையுணர்வுக் கொள்கையும் உருவாகும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

விண்வெளியையும், விண்வெளித்துறையையும் ஆதிக்கம் செலுத்தும் 20 ஆம் நூற்றாண்டின் மனப்பான்மை எவ்வாறு உலக நாடுகளைப் பிரித்தன என்பதைப் பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். இப்போது 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தை ஒன்றுபடுத்துவதிலும், இணைப்பதிலும் விண்வெளித் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

*****



(Release ID: 1762958) Visitor Counter : 417