வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
"நிதி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் உலக சராசரி 64% ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 87% ஆக அதிக அளவில் உள்ளது": திரு பியூஷ் கோயல்
Posted On:
30 SEP 2021 2:15PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் & உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
இரண்டாவது உலகளாவிய ஃபின்டெக் திருவிழா-2021-ல் காணொலி மூலம் உரையாற்றிய அமைச்சர், "நிதி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் உலக சராசரி 64% ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இது 87% ஆக அதிக அளவில் உள்ளது,” என்றார்.
"மே 2021 நிலவரப்படி, இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண தளம் (யூபிஐ) 224 வங்கிகளின் பங்களிப்போடு $68 பில்லியன் மதிப்பிலான 2.6 பில்லியன் பரிவர்த்தனைகளை கண்டுள்ளது. ஆகஸ்ட் 2021-ல் இது வரை இல்லாத அளவில் 3.6 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது" என்று திரு கோயல் கூறினார். "கடந்த ஆண்டு 2 டிரில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ஏஈபிஎஸ் (ஆதார்-இயக்கப்பட்ட கட்டண முறைமை) மூலம் செயல்படுத்தப்பட்டன," என்று அவர் மேலும் கூறினார்.
பெருந்தொற்றின் போது இந்தியாவின் நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) துறை மக்களுக்கு பேருதவி புரிந்ததாகவும், ஊரடங்கு மற்றும் கொவிட் இரண்டாவது அலையின் போது வீட்டில் இருந்தாவாறே பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவியதாகவும் அமைச்சர் கூறினார்.
தேசிய அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) திட்டத்தின் கீழ் விரைவில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் அதிவேக இணைய வசதி கிடைக்கும். மேலும், இந்த சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவை ஃபின்டெக் புதுமைகளின் மையமாக மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
இந்திய ஃபின்டெக் சந்தைகளில் புது நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்குகின்றன என்றும் இந்தியாவின் சந்தை தற்போது 31 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 2025-க்குள் 84 பில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759602
*****************
(Release ID: 1759692)
Visitor Counter : 296