பிரதமர் அலுவலகம்

ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை செப்டம்பர் 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்


மின்னணு சுகாதார சூழலியலுக்குள் இயங்குதன்மைக்கு வழிவகை செய்யும் வகையிலான சீரான இணையவழி தளத்தை ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் உருவாக்கும்

Posted On: 26 SEP 2021 2:28PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியான  ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2021 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்து, உரையாற்றுவார்.

ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கத்தின் மாதிரி திட்டத்தை ஆகஸ்ட் 15, 2020 அன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் அறிவித்தார். தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இந்த மாதிரித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய  ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் கலந்து கொள்வார்.

ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கம் பற்றி:

மக்கள் நிதி, ஆதார் மற்றும் செல்பேசி (ஜாம்) ஆகிய மூன்று திட்டங்கள் மற்றும் அரசின் இதர மின்னணு முன்முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு மிக அதிக தரவுகளுக்கான வசதி, தகவல் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகள், இயங்குத்தன்மை, தரத்தை அடிப்படையாகக் கொண்ட மின்னணு அமைப்புமுறைகள் ஆகியவற்றின் வாயிலாக சீரான இணையவழி தளத்தை ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கம் உருவாக்கும். அதேவேளையில் பாதுகாப்பு, இரகசியத்தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபர் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும். மக்களின் அனுமதி பெற்று அவர்களது மருத்துவ ஆவணங்களை அணுகுவதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் இந்த இயக்கம் வழிவகை செய்யும்.

ஒவ்வொரு நபருக்கும் அளிக்கப்படும் சுகாதார அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கத்தின் முக்கிய அம்சமாக விளங்கும். மக்களின் மருத்துவ கணக்காக செயல்படும் இந்த அடையாள அட்டையுடன் தனிநபர் மருத்துவ ஆவணங்கள் இணைக்கப்படுவதுடன் செல்பேசி செயலி உதவியுடன் அவற்றை அணுகமுடியும். மற்றொரு முக்கிய அம்சமான சுகாதார தொழில்சார் நிபுணர்களின் பதிவேடு மற்றும் சுகாதார வசதிகளின் பதிவுகள், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மருத்துவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக செயல்படும். மருத்துவர்கள்/ மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குபவர்கள் உள்ளிட்டோர் எளிதான பணியை மேற்கொள்வதை இது உறுதி செய்யும்.

இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள பி ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்க சாண்ட்பாக்ஸ், தேசிய மின்னணு சுகாதார சூழலியலில் பங்குகொள்ள விரும்பும் தனியார் துறையினர் உள்ளிட்ட நிறுவனங்கள், சுகாதார தகவல் வழங்குனர் அல்லது சுகாதார தரவு பயனர் அல்லது ஆயுஷ்மான் பாரத் மின்னணு  இயக்கத்தின் கட்டமைப்பு தொகுப்புடன் முறையாக இணைவதற்கு தொழில்நுட்பம் மற்றும் பொருட்களின் சோதனைக்கான திட்டமாக செயல்படும்.

 பணம் செலுத்தும் முறையில் புரட்சியை ஏற்படுத்திய  ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் வசதியைப் போல இந்த இயக்கம் மின்னணு சுகாதார சூழலியலுக்குள் இயங்குத்தன்மைக்கு வழிவகை செய்யும். ஒரே  கிளிக் மூலம் பொதுமக்கள் சுகாதார வசதிகளை அணுக முடியும்.

------(Release ID: 1758322) Visitor Counter : 419