தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் லே நகரில் தொடங்கி வைத்தார்
Posted On:
24 SEP 2021 6:33PM by PIB Chennai
நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது இமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அமைந்திருக்கும் சிந்து சன்ஸ்கிருதி கேந்திராவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பங்களிப்புக்கான பிரதமரின் அறைக்கூவலை கருத்தில் கொண்டு உள்ளூர் திரைப்பட இயக்குநர்களின் பங்களிப்பு இந்த திரைப்பட விழாவில் அதிகளவில் இருக்கும். 12 இமாலய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த திறமையாளர்களின் படைப்புகள் இங்கே காட்சிப்படுத்தப்படும்.
விழாவில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மலை மாநிலங்களுக்கு புதிய அடையாளத்தை வழங்கும் என்றும் இந்த லட்சியத்தை எட்டுவதற்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொய்வின்றி பாடுப்படும் என்றும் கூறினார்.
லடாக் மக்களின் வீரம் குறித்து பேசிய அவர், நமது எல்லைகளை பாதுகாப்பதில் நமது தீரமிக்க ராணுவ வீரர்களுடன் இம்மக்கள் தோளோடு தோள் நிற்பதாக கூறினார். ஷெர்ஷா போன்ற திரைப்படங்கள், போர்களில் தீரத்துடன் போரிட்ட நமது வீரர்களை பற்றி பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும்.
ஓடிடி தளங்களின் வளர்ச்சி குறித்து பேசிய திரு அனுராக் தாக்கூர், இத்தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவதாக கூறினார். பெரிய மாநிலங்களுக்கு மட்டுமில்லாது சிறு மாநிலங்களுக்கும் இந்தத் தளங்கள் வாய்ப்புகளை அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் நடக்க உள்ள சர்வதேச திரைப்பட விழாக்களில் லடாக்கிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
லடாக் பகுதியின் உணவுகளை காட்சிப்படுத்தும் உணவு திருவிழா, அப்பகுதியின் சிறப்பான கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் திரைப்பட விழாவின் போது நடைபெற உள்ளன.
இன்று தொடங்கிய திரைப்பட விழா 2011 செப்டம்பர் 28 வரை நடைபெறும் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்துடன் இணைந்து லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் இதை நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757782
*****************
(Release ID: 1757839)
Visitor Counter : 312