பாதுகாப்பு அமைச்சகம்

குன் சிகரத்துக்கு சாகச பயணம் மேற்கொண்ட ராணுவ குழுவை வரவேற்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Posted On: 20 SEP 2021 3:21PM by PIB Chennai

கார்கில் மலைப் பகுதியில் 7,077 மீட்டர் உயரத்தில் உள்ள நன்- குன் சிகரத்துக்கு, சாகச பயணம் மேற்கொண்ட நிமாஸ்(மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டுகளின் தேசிய கழகம்) குழுவினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புது தில்லியில் இன்று கொடியசைத்து வரவேற்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் திராங் பகுதியில் நிமாஸ் உள்ளது. இதன் இயக்குனர் கர்னல் சர்ப்ராஸ் சிங் தலைமையில், 16 பேர் அடங்கிய குழுவினர் குன் சிகரத்துக்கு சாகச பயணம் மேற்கொண்டனர்.

இது கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடத்தப்பட்டது. சிக்கலான வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த சிகரத்துக்கு நிமாஸ் குழுவினர், வழிகாட்டிகளின் உதவியின்றி சென்றடைந்தனர்.

கொவிட் கட்டுப்பாடுகள் மற்றும் மோசமான காலநிலைகளுக்கு இடையிலும், சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிமாஸ் குழுவினரை பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர், இது போன்ற சாகச பயணங்கள், இளைஞர்கள் இடையே சாகசம் மற்றும் தேசபக்தியை ஊக்குவிக்கும் என்றார்.

நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவதில், இதுபோன்ற சம்பவங்கள் முக்கிய பங்காற்றும் என அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற மலையேறும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதில் பொது மக்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார். இது சுற்றுலா, வேலைவாய்ப்பு, அறிவை வளர்த்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்ற முடியும் என அவர் கூறினார். 

இந்த முயற்சிகளில், மத்திய அரசு, முடிந்த அளவு அனைத்து உதவிகளையும்  அளிக்கும் என அவர் உறுதியளித்தார்.

குன் சிகரத்துக்கு சென்ற நிமாஸ் குழுவினருக்கு சான்றிதழ்கள் வழங்கி, பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756406

*****************



(Release ID: 1756423) Visitor Counter : 194