ஊரக வளர்ச்சி அமைச்சகம்

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - நான்காவது தேசிய ஊட்டச்சத்து மாதம், 2021-ஐ தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கொண்டாடியது

Posted On: 18 SEP 2021 11:35AM by PIB Chennai

நான்காவது தேசிய ஊட்டச்சத்து மாதம், 2021-ஐ ஹிமாச்சலப் பிரதேச மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கொண்டாடியது. ஆரோக்கியமான உணவு முறை குறித்து நிகழ்ச்சியின் போது விவாதித்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளூரிலேயே விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் லட்சியமிகு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுகிறது. இளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்க ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்படுகிறது.

இந்த வருட ஊட்டச்சத்து மாதத்தில் ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு கருப்பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை: 1. ஊட்டச்சத்து மிக்க மர வகைகளை நடுதல், 2. ஊட்டச்சத்துக்கான யோகா மற்றும் ஆயுஷ், 3. அதிக சுமையுள்ள மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பயனாளிகளுக்கு பிராந்திய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குதல் மற்றும் 4. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளித்தல்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கடந்த மாதம் உரையாடிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடவும், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் தூய்மை உள்ளிட்ட சமூக வளர்ச்சி பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் 75 மணி நேரத்தை செலவிடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

ஊட்டச்சத்து மாதத்தின் போது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு உதவுமாறு ஊரக வாழ்வாதார இயக்கங்கள் அறிவுறுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755973

*****************



(Release ID: 1756112) Visitor Counter : 245