அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கட்டிட இடிபாடுகளை பயன்படுத்தி, பெங்களூர் ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் செங்கல் தயாரிப்பு

Posted On: 16 SEP 2021 12:42PM by PIB Chennai

கட்டிட இடிபாடுகள், காரத்தன்மையுடன் கூடிய பிணைப்பு பொருட்களை பயன்படுத்தி எரிசக்தி குறைவான செங்கல்லை பெங்களூர் ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செங்கல், குறைந்த கார்பன்-செங்கல் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இதை அதிக வெப்ப நிலையில் எரிக்க தேவையில்லை. மேலும் இதில் போர்ட்லேண்ட் சிமெண்ட் போன்ற பொருள் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம், ஏராளமாக குவியும் கட்டிட இடிபாடுகள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, கட்டிடங்களில் சுவர்கள் எழுப்புவதற்கு செங்கல் அல்லது கான்கிரீட் பிளாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தயாரிப்புக்கு அதிக எரிசக்தி தேவைப்படுகிறது. இதனால் கார்பன் வெளியேற்றமும் அதிகரிக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 900 மில்லியன் டன் செங்கல் மற்றும் பிளாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, கட்டிட நிறுவனங்கள் ஆண்டுக்கு 70 முதல் 100 மில்லியன் டன் கட்டிட இடிபாடுகளையும் குவிக்கின்றனர்.

நிலையான கட்டுமானத்தை ஊக்கவிக்க 2 முக்கிய விஷயங்களுக்கு தீர்வு காணப்படவேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் வளத்தை பாதுகாப்பதோடு, கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க வேண்டும்

இதற்காக பெங்களூர் ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள், கட்டிட இடிபாடுகள், சாம்பல், உலை மற்றும் தரை கசடு ஆகியவற்றுடன், காரத்தன்மையுடன் கூடிய பிணைப்பு பொருட்களை சேர்த்து அறை வெப்ப நிலையில் செங்கல் மற்றும் பிளாக்குளை தயாரித்துள்ளனர். இது கார்பன் குறைவான செங்கல் என அழைக்கப்படுகிறது. பொறியியல் பண்புகளுக்காக, இந்த செங்கற்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பெங்களூர் ஐஐஎஸ்சி-யின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியளித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம், கட்டிட இடிபாடுகள் பிரச்சினையை குறைக்கும். கட்டிட இடிபாடுகளில் இருந்து குறைந்த கார்பன் செங்கற்களை உருவாக்க ஒரு தொடக்க நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது இன்னும் 6-9 மாதங்களில், ஐஐஎஸ்சி தொழில்நுட்ப உதவியுடன் செங்கல் மற்றும் பிளாக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் என பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் பி.வி.வெங்கடராமா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755375

 

----


(Release ID: 1755430) Visitor Counter : 305