வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

18-வது ஆசியான் - இந்தியா பொருளாதார அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம்

Posted On: 14 SEP 2021 4:59PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் மற்றும் புரூனெய் தருசலம் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மேதகு டத்தோ டாக்டர் அமீன் லியூ அப்துல்லா ஆகியோர் தலைமையில் இன்று (செப்டம்பர் 14, 2021) 18-வது ஆசியான் - இந்தியா பொருளாதார அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

புரூனெய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பொருளாதார அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தற்போதைய பெருந்தொற்று நிலவரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர்கள், பொருளாதாரத்தின் மீதான பெருந்தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களது உறுதித் தன்மையை வெளிப்படுத்தினர். ஆசியான் மற்றும் இந்தியா இடையே உள்ள ஆழ்ந்த வர்த்தகம், முதலீடுகள், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வர்த்தக கூட்டாளர்களின் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை அமைச்சர்கள் பாராட்டினார்கள்.

பெருந்தொற்றின் சவால்களை எதிர்கொள்வதற்காக பிரம்மாண்ட தடுப்பூசித்திட்டம், திறன் மேம்பாடு, பொருளாதார முயற்சிகள் ஆகியவற்றில் இந்தியா தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் கூட்டத்தின் போது அமைச்சர் திருமதி. அனுப்பிரியா படேல் தெரிவித்தார். வேளாண்மை, வங்கி, காப்பீடு, தளவாடங்கள், பெருநிறுவனச் சட்டங்கள், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மேற்கொண்டுள்ள விரிவான சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் சுகாதாரம் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள துறைகளில் முதலீடு செய்யுமாறு ஆசியான் நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆசியான் இந்திய பொருளாதாரக் கூட்டணியை மேம்படுத்துவதற்கான ஆசியான் - இந்தியா வர்த்தகக் கவுன்சிலின் பரிந்துரைகளை அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

சரக்குகள் குறித்த ஆசியான் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாகவும் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. வர்த்தக ஏற்பாடு, அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வகையிலும் கூட்டாளர்களின் இலட்சியங்களை சமன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்று திருமதி. படேல் கூறினார். ஆசியான் அமைப்புடன் இந்தியா கொண்டுள்ள பொருளாதாரக் கூட்டணியின் முக்கியத்துவத்தையும், கூட்டணி நாடுகளுக்கு இடையேயான வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார உறவுகள் குறித்தும் வலியுறுத்திய அவர், பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆசியான் அமைப்பின் மீள் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754798



(Release ID: 1754874) Visitor Counter : 255