எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் இந்தியாவின் இலக்கிற்கு அமெரிக்கா பாராட்டு

Posted On: 13 SEP 2021 4:33PM by PIB Chennai

பருவநிலைக்கான அமெரிக்க சிறப்பு தூதர் திரு ஜான் கெர்ரி தலைமையிலான குழுவினரை மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே. சிங் இன்று சந்தித்துப் பேசினார். பருவநிலை மாற்றம் சம்பந்தமான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், எரிசக்தி மாற்றம் பற்றி இதர நாடுகளுக்கு வழி வகுப்பதற்கு இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

எரிசக்தித் துறையில் இந்தியாவின் உறுதித் தன்மையையும், 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் உறுதிப்பாட்டையும் அமெரிக்க குழுவினர் பாராட்டினர். இந்தியாவில் 18 மாதங்களில் 28.02 மில்லியன் வீடுகளுக்கு மின்சார வசதிகள் செய்திருப்பதையும் அவர்கள் பாராட்டினார்கள்.

தூய்மையான எரிசக்தி மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகளை அமைச்சர், அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் சேமிப்புமிகப்பெரும் சவாலாக விளங்குவதாகவும், பெருவாரியான மக்கள் இந்த எரிசக்தியை அணுகச் செய்வதற்காக இந்த விஷயம் உடனடியாக எதிர் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.‌ வரும் மாதங்களில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்பகுப்பான்களுக்கு மிகப்பெரிய ஏல நடவடிக்கைகளை மேற்கொள்ள  திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஏல நடைமுறைகளில் கலந்து கொள்வதற்காக தங்கள் நாட்டு நிறுவனங்களை அனுப்புமாறு அமெரிக்க தரப்பினரை திரு சிங் கேட்டுக்கொண்டார்.‌

சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணையுமாறு அமெரிக்காவிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். லடாக்கில் மேற்கொள்ளப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை எரிசக்தி வழித்தடம் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடையும் உயரிய லட்சியத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆர்வம் தெரிவிப்பதாக பருவநிலைக்கான சிறப்பு தூதர் கூறினார். இதன் மூலம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள உறுதித்தன்மையை விட அதிக அளவில் இந்தியா சாதனை புரியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754542

*****************

 


(Release ID: 1754611) Visitor Counter : 270