பிரதமர் அலுவலகம்

ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் மகளிர் நல அமைச்சர் மேதகு திருமிகு மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மேதகு திரு பீட்டர் டட்டன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரதமருடன் சந்திப்பு

Posted On: 11 SEP 2021 9:59PM by PIB Chennai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதலாவது அமைச்சகங்கள் அளவிலான 2+2 பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் மகளிர் நல அமைச்சர் மேதகு திருமிகு மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மேதகு திரு பீட்டர் டட்டன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்கள்.

2+2 பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்டதற்காக  பாராட்டு தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்துவரும் கேந்திர ஒன்றிணைப்பின் அடையாளமாக இது அமைவதாகச் சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு கேந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் நீட்டிப்பது பற்றிய சாத்தியக்கூறுகள், இந்திய- பசிபிக் பகுதியை நோக்கிய இரு நாடுகளின் பொதுவான அணுகுமுறை, இரு தரப்பிற்கும் இடையே மனித பலமாக செயல்படும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான கேந்திர கூட்டணியை விரைந்து மேம்படுத்துவதில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மாரிசன் அளித்துவரும் பங்களிப்பிற்கு பிரதமர் தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார். தமது வசதியின் அடிப்படையில் விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு மாரிசனுக்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

******

 



(Release ID: 1754487) Visitor Counter : 140