சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொவிட்- சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றி கவனமாக இருப்பது அவசியம்: டாக்டர் என்.கே. அரோரா எச்சரிக்கை

Posted On: 09 SEP 2021 12:44PM by PIB Chennai

நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், கொவிட்-19 செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து டிடி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கேள்வி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் 3-வது அலை உருவாகுமா?

நம் நாட்டில் கடந்த பல வாரங்களாக தினமும் 30,000-45,000 பாதிப்புகள் சராசரியாக பதிவாகின்றன. குறிப்பாக கேரளா பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்கள் மற்றும் ஒரு சில தென் மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய சார்ஸ்-கோவ்-2 தொற்றுகளின் மரபணுவை ஆராய்ந்தபோது ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய வகைகள் உருவாகவில்லை. இரண்டாவது அலையின் இறுதி கட்டமாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே கொவிட் சரியான நடத்தை விதி முறையை பின்பற்றுவது, குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். இந்தக் காலத்தில் புதிய உருமாறும் தொற்று உருவாவதும் மூன்றாவது அலை ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

கேள்வி: டெல்டா வகை தொற்றுக்கு எதிராக நமது கொவிட் தடுப்பூசிகள் எந்த அளவு பயனளிக்கும்? மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

கொவிட் தடுப்பூசியின் செயல்திறனைக் கீழ்காணும் வகையில் விளக்கலாம்:

•        தொற்றைத் தடுப்பதில் செயல்திறன் வாய்ந்திருப்பதால் நோய் பரவலையும் கட்டுப்படுத்தும்.

•        அறிகுறியுடன் கூடிய நோயைத் தடுப்பதில் அதிகப் பயனை அளிக்கும்.

•        தீவிர நோயிலிருந்து பாதுகாக்கும். தீவிர பாதிப்பைத் தடுப்பதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவையை குறைப்பதிலும் கொவிட்-19 தடுப்பூசி அதிக பயன் அளிப்பது, இதன் முக்கிய அம்சமாகும். இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசிகள் 90-95% வரை தீவிர நோய் மற்றும் உயிரிழப்பை தடுப்பதில் திறன் பெற்றுள்ளன. டெல்டா வைரஸ் உட்பட அனைத்து வகைகளுக்கும் இது பொருந்தும். இந்தியாவில் இன்று ஏற்படும் பெரும்பாலான தொற்றுக்கள் டெல்டா வைரஸ் தொற்றினாலே ஏற்படுகின்றன.

கேள்வி: ஒருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து, தற்போது எதிர்சக்தி பொருட்கள் அவரது உடலில் உருவாகியிருந்தால், கொவிட் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அவர் ரத்தம் அல்லது பிளாஸ்மாவை தானமாகக் கொடுக்கலாமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) கீழ் நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உயர் தர ஆராய்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கும் அவசியம் ஏற்படும் தீவிர தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகள் பெரும்பாலோனோருக்கு பிளாஸ்மா சிகிச்சை அவ்வளவு பலனளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோல உலகின் இதர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதே போன்ற முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதனால் தீவிர கொவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை வழிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை ஐசிஎம்ஆர் நீக்கியுள்ளது.

கேள்வி: நம் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமா?

தற்போதைய நிலவரம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் முடிவுகள் அடிப்படையில் பூஸ்டர் டோசின் அவசியம் குறித்து நாம் முடிவெடுக்க முடியாது. நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வுகள் அதற்கு வழிகாட்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753459

*****************



(Release ID: 1753544) Visitor Counter : 222