பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படையின் விமானப்பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் கொடி

Posted On: 06 SEP 2021 2:33PM by PIB Chennai

கோவாவில் உள்ள இந்திய கடற்படையின் விமானப்பிரிவு மையமான ஐஎன்எஸ் ஹன்சாவில், விமானபிரிவுக்கு, குடியரசுத் தலைவரின் கொடியை, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, அங்கு கடற்படை வீரர்கள் 150 பேர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தது. கோவா ஆளுநர் திரு பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக், கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங். மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

போர் மற்றும் அமைதி காலத்தில், நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் கடற்படையின்  விமானப்பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் கொடி அளிக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளில், 250க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன், கடற்படையின் விமானப் பிரிவு சிறப்பான பணியாற்றியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தை விடுவிக்க நடந்த போரில் ஐஎன்ஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பிரம்மாண்ட பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.  மத்திய அரசின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குக்கு ஏற்ப, இந்திய கடற்படை மேற்கொள்ளும், உள்நாட்டுமயம் முயற்சிகளை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.  விமான தொழில்நுட்பம், நவீன உள்நாட்டு ஆயுதங்கள், கடற்படை விமானத்துக்கான சென்சார் கருவிகள் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

கடற்படையின் முன்னாள் மற்றும் பணியில் உள்ளவர்களின் தன்னலமற்ற சேவையை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752528

 

*****************



(Release ID: 1752574) Visitor Counter : 280