மத்திய அமைச்சரவை

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம்- ரஷ்யாவின் தொழில்முறை கணக்காளர்கள் நிறுவனம்: புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 AUG 2021 2:06PM by PIB Chennai

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) மற்றும் ரஷ்யாவின் தொழில்முறை கணக்காளர்கள் நிறுவனம் (ஐபிஏஆர்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்:

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) மற்றும் ரஷ்யாவின் தொழில்முறை கணக்காளர்கள் நிறுவனம் (ஐபிஏஆர்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக, தொழில்முறை கணக்கியல் பயிற்சி, தொழில்முறை நெறிகள், தொழில்நுட்ப ஆராய்ச்சி, கணக்கியல் சார்ந்த அறிவை மேம்படுத்துதல், தொழில்முறை மற்றும் அறிவுசார் வளர்ச்சி ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பட உதவிகரமாக இருக்கும்.

அமலாக்க உத்தியும் இலக்குகளும்:

கருத்துப் பரிமாற்றம், தொழில்முறை கணக்கியல் பயிற்சி; தொழில்முறை நெறிகள்; தொழில்நுட்ப ஆராய்ச்சி; கணக்காளர்களின் மேம்பாடு பற்றிய தகவல்கள் வாயிலாக கணக்கியல் தொழில்முறை சம்பந்தமான துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கருத்தரங்கங்கள், மாநாடுகள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையிலான இணை நடவடிக்கைகளின் வாயிலாக பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும், உலகளவில் இந்த தொழில்முறையை ஊக்குவிப்பதற்காக, இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கணக்கியல் தொழில்முறையின் வளர்ச்சி குறித்த தற்போதைய தகவல்களை எடுத்துரைப்பதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். தகவல் சார்ந்த ஆதரவை அளிக்கும் விதமாக, இரண்டு நிறுவனங்களின் இணையதளங்களுக்கும் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

மிகப்பெரிய தாக்கம்:

ஐசிஏஐ உறுப்பினர்கள் ரஷ்யாவில் தொழில்முறை வாய்ப்புகளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் ஐசிஏஐ மற்றும் ஐபிஏஆர் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும். ஐசிஏஐ உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களின் சிறந்த நலனிற்காக, பரஸ்பர பயனுள்ள உறவுமுறையை மேம்படுத்துவதற்காக, இணைந்து பணியாற்றுவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கணக்கியல் தொழில்முறையில் ஏற்றுமதி சார்ந்த சேவைகளை வழங்கி, ஐசிஏஐ, ரஷ்யாவுடனான கூட்டணியை மேலும் வலுப்படுத்த உதவும்.

பயன்கள்:

ஐசிஏஐ உறுப்பினர்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நடுத்தர முதல் உயர்ந்த பதவிகளை வகிப்பதால், ஒரு நாட்டின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், முடிவுகள்/ கொள்கைகளை மேற்கொள்ளும் உத்திகளில் செல்வாக்கை பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் 45 நாடுகளில், 68 நகரங்களில் உள்ள பிரதிநிதி அலுவலகங்கள் மற்றும் தனது பரந்த கிளை இணைப்புகளின் மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பகிர்ந்துகொள்ளும் முக்கிய பணியை மேற்கொள்வதில் ஐசிஏஐ உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பகிர்வதன் மூலம், உலக நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி, அதன் வாயிலாக அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் தொழில்முறை கணக்காளர்கள் நிறுவனம் ஆகியவை பயன்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748831

-----



(Release ID: 1748871) Visitor Counter : 183