சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கிளாஸ்கோவில் நடைபெற உள்ள 26-ஆவது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டிற்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் உறுதி

Posted On: 18 AUG 2021 1:04PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா எப்போதுமே உறுதிபூண்டிருப்பதாக  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 26-ஆவது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டின்  (காப்26) வெற்றி மற்றும் சமமான விளைவுகளுக்காக இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமாக பணியாற்றும் என்றும், வரும் நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள காப் 26 மாநாட்டிற்கு இந்தியா அனைத்து ஆதரவையும் இங்கிலாந்திற்கு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காப் 26 மாநாட்டின் தலைவர் மாண்புமிகு திரு அலோக் சர்மாவுடன் புதுதில்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பருவநிலை மாற்றம், காப் 26, இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2030-ஆம் ஆண்டிற்கான திட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இதர விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் அதே வேளையில், பருவநிலை நீதியிலும் கவனம் செலுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், “பருவநிலை நடவடிக்கைகள், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. வளர்ந்து வரும் நாடுகளுக்காக பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மையின் மாறுபாடு மற்றும் செயல்பாடு, முடிவெடுக்கும் தன்மையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா கடுமையாக வலியுறுத்துகிறது”, என்று கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழு, பேரிடர் நெகிழ்வுதன்மை உள்கட்டமைப்பு மீதான கூட்டணி, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி உள்ளிட்ட சர்வதேச முன்முயற்சிகள் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ள காப் 26 முயற்சிகளுக்கும், கிளாஸ்கோவில் நடைபெற உள்ள மாநாடு வெற்றி பெறுவதற்கும், மாண்புமிகு திரு அலோக் சர்மா, இந்தியாவின் ஆதரவைக் கோரினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746903

*****

(Release ID: 1746903)



(Release ID: 1746924) Visitor Counter : 424