சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்: ஐசிஎம்ஆர்-என்ஐவி இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம்

Posted On: 18 AUG 2021 11:22AM by PIB Chennai

வெளிநாடுகளில், கொவிட் தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசியில் அதிக அளவில் இடைவெளி ஏற்படும் காரணத்தால் உலக சுகாதார அமைப்பு இந்த முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்”, என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இந்தியா சயின்ஸ் என்ற ஓடிடி தளத்திற்கு அளித்த பேட்டியில் புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)- தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளைக் கலந்து செலுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு கட்டத்தில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களில் செலுத்தப்பட்டன. தேசிய நுண்கிருமி நிறுவனத்தில் இது போன்ற மாதிரிகளை நாங்கள் பரிசோதித்ததில் இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை கண்டறிந்தோம். அவர்களுக்கு எந்தவிதமான தீவிர பாதிப்பும் தென்படவில்லை. அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஓரளவு சிறப்பாகவே இருந்தது. எனவே இவ்வாறு செலுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், ஒரு சில நாட்களில் இது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிப்போம்”, என்று தெரிவித்தார்.

2-18 வயது வரையிலான குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கோவேக்சின் தடுப்பூசியின் சோதனை 2 மற்றும் 3-ஆம் கட்ட நிலைகளில் தற்போது இருப்பதாகவும், வெகுவிரைவில் அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவ்வாறு கிடைக்கப்படும் முடிவுகள், கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் வாக்கில் குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படக் கூடும் என்றும் அவர் கூறினார்.

எதிர்கால அலைகளைத் தடுப்பது குறித்த கேள்விக்கு, “புதிய வகை தொற்றுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நம்மிடையே இரண்டு மிகப்பெரிய ஆயுதங்கள் உள்ளன- முகக் கவசங்களை முறையாக அணிவது, தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துவது. அதன் பிறகு அலைகள் உருவானாலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது”, என்று டாக்டர் பிரியா ஆப்ரஹாம் பதிலளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746864

******

 

 

(Release ID: 1746864)


(Release ID: 1746920) Visitor Counter : 268