மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஐ. நா பெண்களுடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம்-நாஸ்காம் வழங்கும் ஸ்டார்ட் அப் பெண் தொழில் முனைவோர் விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிப்பு

Posted On: 17 AUG 2021 6:53PM by PIB Chennai

அனைவருடனும், அனைவரின் பங்களிப்பு மற்றும் நம்பிக்கையுடனும் அனைவரின் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு, மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கும் பெண்களிடையே தொழில்முனைதலை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசால் இவற்றை நோக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

பெண்களிடையே தொழில் முனைதல் உணர்வை உருவாக்குவதற்கும், இந்திய டிஜிட்டல் சகாப்தத்தை வழிநடத்த அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்-நாஸ்காம் ஸ்டார்ட் அப் பெண் தொழில் முனைவோர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தைக் குறிப்பதற்காக காணொலி மூலம் 2021 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்த விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தொழில்நுட்பம் சார்ந்த புது நிறுவனங்களை நடத்தி வரும் அனைத்து பெண் தொழில் முனைவோரும் பங்குபெறும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுகளுக்காக நாடு முழுவதிலும் இருந்து 159 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் பெறப்பட்ட இந்த விண்ணப்பங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு, தொழில்துறை மற்றும் கல்வித் துறையை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற நடுவர்கள் பரிசீலித்து 12 பெண் தொழில்முனைவோரை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இரண்டு பெண் தொழில்முனைவோருக்கு நடுவர் விருதுகளும் ஒருவருக்கு சிறப்புப் பாராட்டும் வழங்கப்படுகிறது. வெற்றியாளர்களுக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் வழங்கப்படும்.

விருது பெற்றோரை வாழ்த்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், "உண்மையான வெற்றியின் அடையாளமாக இதை நான் கருதுகிறேன். உங்களுடைய சிந்தனைகள் செயலாக்கத்தில் உள்ளன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களது சிந்தனைகள் உபயோகிக்கக்கூடிய பொருள்களாக விரைவில் மாறும் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் என்றுமே உங்கள் கூட்டாளியாக இருந்து வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாவதற்கான உங்கள் பயணத்தில் ஆதரவளிக்கும்," என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746754

 

-----(Release ID: 1746804) Visitor Counter : 281