பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில், பழங்குடியினரின் 75 தயாரிப்புகள் இந்திய பழங்குடியினர் தயாரிப்புகள் பட்டியலில் சேர்ப்பு
Posted On:
17 AUG 2021 3:25PM by PIB Chennai
இந்தியா 75வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைப்பதால், பழங்குடியினரின் 75 புதிய தயாரிப்புகளை இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (டிரைஃபட்) அறிமுகம் செய்து அவற்றை ஏற்கனவே உள்ள பழங்குடியினர் தயாரிப்புகள் பட்டியலுடன் இணைத்தது.
நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியினர் மிகவும் நேர்த்தியாகவும், கவரக்கூடிய வகையிலும் தயாரித்த உலோக உருவங்கள், கையால் செய்யப்பட்ட நகைகள், தொங்கல்கள் போன்ற அலங்காரங்கள், சட்டைகள், குர்தாக்கள், முகமூடிகள், கைவினை ஆடைகள் மற்றும் மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், பிற மூலிகை பொடிகள் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.
மேலும், இந்தியா@75 - மக்கள் இயக்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, பழங்குடியினரின் 75 தயாரிப்புகளை, டிரைபட் அடையாளம் கண்டுள்ளது. இவை, புவிசார் அடையாளக் குறியீடுக்காக (ஜிஐ) பதிவு செய்யப்படும். இந்த ஜிஐ குறியீட்டுக்கான பழங்குடியினர் தயாரிப்புகள், 20 மாநிலங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 37 தயாரிப்புகள், 8 வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை. ஜார்கண்ட்டிலிருந்து 7 தயாரிப்புகளும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 6 தயாரிப்புகளும் ஜிஐ குறியீடுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், உலகம் முழுவதும் உள்ள 100 இந்தியத் தூதரங்களில் தற்சார்பு இந்தியா மையத்தை டிரைபட் அமைக்கவுள்ளது. இந்த மையம் ஜிஐ குறியீட்டுடன் கூடிய பழங்குடியினர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும். பழங்குடியினர் தயாரிப்புப் பொருள்களின் அட்டவணை, பழங்குடியினத் தயாரிப்புகளின் அபாரம் மற்றும் வகைகளை வெளிக்காட்டுகிறது. ஜமைக்கா, அயர்லாந்து, துருக்கி, கென்யா, மங்கோலியா, இஸ்ரேல், பின்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உட்பட 42 தூதரங்கள் மற்றும் துணைத் தூதரங்களில் பழங்குடியினர் தயாரிப்புகளின் விற்பனை மையங்களை டிரைபட் அமைக்கவுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு, புதுதில்லியில் மட்டும் பழங்குடியினர் தயாரிப்புப் பொருள்களை விற்கும் ஒரு கடை இருந்தது. தற்போது நாடு முழுவதும் பழங்குடியினர் தயாரிப்புகளை விற்கும் 141 சில்லரை விற்பனைக் கடைகள் உள்ளன. டிரைப்ஸ் இந்தியா என்ற நெட்வொர்க் மூலம், பழங்குடியினர் தயாரிப்புகளை டிரைபட் கொள்முதல் செய்து விற்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746665
(Release ID: 1746738)
Visitor Counter : 334