பாதுகாப்பு அமைச்சகம்

செங்கோட்டையில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: பிரதமர் திரு நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

Posted On: 14 AUG 2021 2:59PM by PIB Chennai

அந்நிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தைநாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமே நாட்டுப்பற்றுடன் திகழ்கிறது. இந்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

2021 ஆகஸ்ட் 15 அன்று புதுதில்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை ஏற்பார். தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ள அவர், நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாட்டின் 75-வது ஆண்டு விடுதலையைக் குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் 2021 மார்ச் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தது நினைவிருக்கலாம். 2023 ஆகஸ்ட் 15 வரை இந்த கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடக்கும்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் செங்கோட்டையின் கொத்தளங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி செல்வார். அங்கு அவரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத்சிங், பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்,

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே கடற்படை தளபதி ஜெனரல் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா வரவேற்பார்கள்.

இதை தொடர்ந்து தேசியக் கொடியை பிரதமர் ஏற்றுவார். பின்னர் மூவர்ண கொடிக்கு தேசிய மரியாதை செலுத்தப்படும். 16 பேர் கொண்ட கடற்படை இசைக்குழு நாட்டுப் பண் இசைப்பார்கள். எம் சி பி ஓ வின்சென்ட் ஜான்சன் இசைக்குழுவை வழிநடத்துவார்.

 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரான ஈட்டி எறிதல் வீரர் சுபேதார் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 32 ஒலிம்பிக் வெற்றியாளர்களும் இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 240 ஒலிம்பிக் வீரர்கள், ஆதரவு பணியாளர்கள், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பின் அதிகாரிகள் செங்கோட்டையின் முன்பு உள்ள கியான் பாதைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை வென்று இதுவரை இல்லாத அளவு வெற்றியை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இந்த முறை பெற்றுள்ளது.

கண்ணுக்கு தெரியாத எதிரியான கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடிய கொரோனா வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கான தனிப்பகுதி கொத்தளத்தின் தெற்கு திசையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக, பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிய உடன், இந்திய விமானப்படையின் 2 எம் ஐ 17 1வி ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவ உள்ளன. முதல் ஹெலிகாப்டரின் கேப்டன் விங் கமாண்டர் பல்தேவ் சிங் பிஷ்ட் ஆவார். இரண்டாவது ஹெலிகாப்டரின் கேப்டனாக விங் கமாண்டர் நிகில் மெஹ்ரோத்ரா இருப்பார்.

 மலர்கள் தூவப்பட்ட பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார். அவரது உரை நிறைவடைந்தவுடன் தேசிய மாணவர் படையினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். நாட்டுப்பற்று மிக்க இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 500 தேசிய மாணவர் படையினர் (ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) கலந்து கொள்கிறார்கள்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745759

*****************



(Release ID: 1745866) Visitor Counter : 200