குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திரு எம் வெங்கையா நாயுடு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு: கடந்த ஓராண்டில் அவரது செயல்பாடுகளை எடுத்துரைக்கும் மின்னணு புத்தகம் வெளியீடு

Posted On: 11 AUG 2021 1:40PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் அவரது செயல்பாடுகள் குறித்த ஒரு பார்வையை எடுத்துரைக்கும் வகையில் ஓர் மின்னணு புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ளது.

10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 133 நிகழ்ச்சிகளில் (காணொலி வாயிலாக மற்றும் நேரடியாக) குடியரசு துணைத் தலைவர் கலந்து கொண்டதாகவும், இவற்றில் 22 நிகழ்ச்சிகள் துவக்க விழாக்கள் என்றும் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த மின்னணு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் திரு நாயுடு 53 சொற்பொழிவுகளில் கலந்துக் கொண்டு, 23 புத்தகங்களை வெளியிட்டு, 21 நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்டு, 7 பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றி, 4 விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டிருப்பதுடன் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

மாநிலங்களவையின் தலைவராக, நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களவை சபாநாயகருடன் இணைந்து கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையேயும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளை அவர் செய்தார். இதன் விளைவாக மாநிலங்களவையின் செயல்திறன், 2017-18-ஆம் ஆண்டின் 48.17%லிருந்து 2020-21 இல் (2021 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை) 95.82% ஆக அதிகரித்தது. கடந்த 4 ஆண்டுகளிலேயே மிக அதிகமாக 2020-21-ஆம் ஆண்டில் 44 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. அதேபோல நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக 74 அறிக்கைகளை 8 மாநிலங்களவை குழுக்கள் சமர்ப்பித்தன.

திரு எம் வெங்கையா நாயுடுவின் தலைமையின் கீழ், மாநிலங்களவையின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஆர்எஸ்டிவி-யின் (RSTV) வலையொளி சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் முதல் 59 லட்சமாக புதிய உச்சத்தை எட்டியது. மேலும், மாநிலங்களவை தலைவரால் உருவாக்கப்பட்ட குழுவின் முயற்சியால் எல்எஸ்டிவி (LSTV) மற்றும் ஆர்எஸ்டிவியை இணைத்து சன்சாத் டிவி என்ற புதிய தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு வருகிறது.

பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடாளுமன்ற புல்வெளிகளில் குடியரசு துணைத் தலைவர் இன்று மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744739

****



(Release ID: 1744807) Visitor Counter : 199